Actor Kailas: அச்சச்சோ.. மலையாள திரையுலகின் முக்கிய பிரபலம் மறைவு.. சோகத்தில் ரசிகர்கள்..
நடிகர் கைலாஷ் நாத் தமிழில் ஒரு தலை ராகம்,பாலைவனச்சோலை, வள்ளி உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மூத்த நடிகர் கைலாஸ் நாத் உடல்நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிமிக்ரி கலைஞராக பயணம்
கைலாஸ் நாத் உள்ள மன்னார், திருவாடாவில் பிறந்தார்.அதே பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் இடைநிலைப் படிப்பை முடித்த அவர் அருகிலுள்ள தேவசம் போர்டு பம்பா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பள்ளி நாட்களில், கைலாஸ் மிமிக்ரி நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம். இதனால் நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட நடிப்பு பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். அங்குதான் பிரபலங்களான நாசர், ஷங்கர், சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீநாத் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இதனிடையே திரையுலகில் வருவதற்கு முன் ஆசிரியராகவும் கைலாஷ் நாத் பணியாற்றியுள்ளார்.
1977ஆம் ஆண்டு சங்கம் திரைப்படத்தில் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமான அவர்,சேதுராமய்யர் சிபிஐ, ஸ்வாந்தம் என்ன பாடம், இரட்டை மதுரம், ஸ்ரீ நாராயண குரு, மற்றும் ஷரவர்ஷம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார். கைலாஷ் மொத்தம் 163 படங்களில் நடித்துள்ளார் அதில் 90 படங்கள் தமிழ் மொழியில் வெளியானது.
கல்லீரல் நோய்க்கு சிகிச்சை
ஸ்ரீகுமாரன் தம்பியிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அவர், 1988 ஆம் ஆண்டு இது நல்ல தமாஷா என்ற மலையாளப் படத்தையும் இயக்கியுள்ளார். 1990 ஆம் ஆண்டில் சின்னத்திரையில் நுழைந்த அவர், மின்னுகெட்டு, என்டே மானசபுத்ரி, பிரணயம் மற்றும் மனசரியதே ஆகிய சீரியல்களிலும் நடித்து பாராட்டைப் பெற்றார். ஒரு தலை ராகம்,பாலைவனச்சோலை, வள்ளி உள்ளிட்ட படங்களிலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கைலாஸுக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இப்படியான நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் பிரபலமான 'சாந்த்வானம்" சீரியலின் படப்பிடிப்பின் போது கைலாஷூக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கல்லீரல் நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அவரின் மரண செய்தியை நடிகை சீமா ஜி நாயரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உறுதி செய்தார். இதனால் மலையாள திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கைலாஷ் நாத்தின் இறுதி சடங்குகள் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.