Mammootty : மம்மூக்கா.. எப்போதும் ரசிகர்களின் செல்லம்.. கதைகளின் காதலன்
தமிழில் தளபதி, ஆனந்தம் , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு உள்ளிட்ட க்ளாசிக் படங்களை கொடுத்த மம்மூட்டி குறித்து தெரியாத விஷயங்கள் இருக்கு
மம்மூக்கா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மம்மூட்டி.. சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் மம்மூட்டியிடம் இளம் நடிகர்கள் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன. ஒரு குட்டி இண்ட்ரோ..
1971-ஆம் ஆண்டு வெளியான அனுபவன் பாலிச்சக்கல் என்கிறப் படத்தில் மிகச் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார் மம்மூட்டி. திரைப்படங்களில் நடிப்பதற்கான ஆர்வம் இருந்தாலும் தனது குடும்பச் சூழல் காரணமாக திருமணம் செய்துகொண்டு வழக்கறிஞர் வேலையைத் தொடர்ந்து வந்தார். பின் சில ஆண்டுகளுக்குப் பிறகு எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய விள்கனுண்டு ஸ்வப்னங்கள் என்ற படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவின் அத்தனை முக்கியமான இயக்குநர்களுடனும் பணியாற்றியிருக்கிறார். ஸ்டார் முதல் சூப்பஸ்டார் 1980 களில் மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்த்தைப் பெற்றார் மம்மூட்டி. ஆனால் தனது ஸ்டார் அடையாளத்தை எந்த வகையிலும் தனது நடிப்பிற்கு தடையாக வருவதற்கு அவர் அனுமதிக்கவில்லை. ஒரே நேரத்தில் மிகப்பெரிய இயக்குநர்களுடனும் அதே நேரத்தில் அறிமுகஇயக்குநர்களுடனும் வேலை செய்திருக்கிறார். கேரளாவில் கமர்ஷியல் சினிமா ஒரு புறமிருக்க மறுபக்கம் கலை சினிமாக்களை இயக்கி வந்த அதூர் கோபாலகிருஷ்ணனின் படங்களில் விரும்பி நடித்தார்.
தனது கதாபாத்திரம் எவ்வளவு பெரிதாகவோ சின்னதாகவோ இருக்கிறது என்பதை பற்றிய கவலை அவருக்கு இருந்ததில்லை. நல்ல கதையை ஒருவர் படமாக்க நினைக்கிறார் என்றால் அதில் தனது பங்கு இருக்க வேண்டும் என்று எப்போது நினைத்தவர் மம்மூட்டி. தமிழில் மம்மூட்டி மெளனம் சம்மதம் என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் மம்மூட்டி. மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் அவர் நடித்த தேவா கதாபாத்திரம் இனி ஒருவர் ஈடுசெய்ய முடியாத அளவிற்கு நிலைத்துவிட்டது. தொடர்ந்து மறுமலர்ச்சி, ஆனந்தம் உள்ளிட்ட படங்களின் நடித்தார். சில காலம் தமிழ் சினிமாவில் தோன்றாத மம்மூட்டி ராம் இயக்கிய பேரன்பு படத்தின் மூலமாக ரீஎண்ட்ரி கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேல் மம்மூட்டியின் திரை வாழ்க்கைக்கு அடையாளமாக இருப்பது புரட்சியாளர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றில் அம்பேத்கராக அவர் நடித்தது. அந்த துணிச்சல் அவருக்கு மட்டுமே இருந்தது என்றும் சொல்லலாம்.
400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மம்மூட்டி 3 முறை தேசிய விருதையும் 7 முறை கேரள மாநில அரசின் விருதையும் வென்றுள்ளார். கடந்த ஆண்டும் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்திற்காக 8-வது முறையாக மாநில விருதை வென்றார்.
மேலும் பத்மஸ்ரீ விருது இரண்டு முறை கெளரவ டாக்டர் பட்டமும் மம்மூட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. பட்டத்திற்கு போட்டி போடாத நடிகர் அவர். இன்று கோலிவுட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்கிற போட்டி நிலவி வருகிறது. ஆனால் சூப்பர்ஸ்டார் என்பது வெறும் ஒரு பட்டம் மட்டுமே என்பதை உணர்த்தும் வகையில் தனது இமேஜுக்காக இல்லாமல் நல்ல கதைகளை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார் மம்மூக்கா...