FDFS show : மெஜாரிட்டியான ரசிகர்களின் ஃபேவரட் FDFS காட்சி விஜய் படம்தான்... ப்ளூ ஸ்டார் டீம் பகிர்ந்த ஸ்வாரஸ்யம்
FDFS Shows : பெரும்பாலான மக்களின் மறக்கமுடியாத FDFS காட்சி என்றால் அது விஜய் படமாக உள்ளது. மறக்கமுடியாத மொமண்ட் பகிர்ந்த ப்ளூ ஸ்டார் டீம்.
பா. ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இயக்குநர் பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ். ஜெயக்குமார் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டையும் இரு அணிகளுக்கு இடையே நடக்கும் மோதலையும் மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க இப்படக்குழுவினர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டபோது மிகவும் ஸ்வாரஸ்யமாக அவர்கள் மிகவும் விரும்பி பார்த்த மறக்க முடியாத FDFS காட்சிகள் குறித்து ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருந்தனர்.
நடிகர் அசோக் செல்வன் தன்னுடைய மறக்க முடியாத அனுபவம் பற்றி பகிர்கையில் விஜய் நடிப்பில் வெளியான 'வேலாயுதம்' படம் பற்றி குறிப்பிட்டு இருந்தார். ரோகிணி தியேட்டரில் அப்படத்தை பார்க்கும் போது ஸ்டேஜ் மேலே ஏறி சரியான டான்ஸ் ஆடினோம். மிகப்பெரிய கொண்டாட்டமாக அப்படம் இருந்தது. போக்கிரி படத்தை கூட அந்த அளவிற்கு நாங்கள் கொண்டாடவில்லை. வேலாயுதம் படத்தை கிட்டத்தட்ட பத்து பேர் சேர்ந்து பார்க்க சென்றோம். அந்த FDFS காட்சி மறக்க முடியாத ஒரு மொமெண்ட்டாக இருந்தது என்றார் அசோக் செல்வன்.
அடுத்ததாக நடிகை கீர்த்தி பாண்டியன் தன்னுடைய மறக்கமுடியாத FDFS காட்சி பற்றி பேசுகையில் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தை நாங்கள் ராம் தியேட்டரில் சென்று பார்த்தோம். அது ஒரு மறக்க முடியாத மொமெண்ட்டாக இருந்தது.
நடிகர் பிரித்வி பாண்டியராஜன் தன்னுடைய ஃபேவரட் படம் பற்றி பேசுகையில் "எனக்கு வந்து விஜய் சாரோட 'மெர்சல்' படம் ஒரு மறக்க முடியாத படம். FDFS பார்த்தேனா இல்லையா என தெரியல. ரோகிணி தியேட்டரில் போய் அந்த படத்தை பார்க்க சென்ற போது பயங்கர கூட்டம். படிக்கெட்டில் நாங்கள் நின்று கொண்டு இருக்கோம். எங்களுக்கு முன்னாடி கண்ணாடி தான் இருக்கு. மொத்த கூட்டமும் அப்படி தள்ளுது. அவங்க தொறக்கலான கண்ணாடி அப்படியே உடைஞ்சு நாங்க விழுந்துருவோம். அந்த மொமெண்ட் மறக்கமுடியாத ஒன்று" என கூறினார்.
அடுத்ததாக பேசிய சாந்தனு பாக்யராஜ் "2013ம் ஆண்டு விஜய் அண்ணனோட 'துப்பாக்கி' படம். அது எனக்கு ரொம்ப நல்லா ஞாபகம் இருக்கு. அதே நாளில் தான் என்னுடைய 'அம்மாவின் கைபேசி' படமும் வெளியானது. 'துப்பாக்கி' படத்தின் FDFS காட்சி பார்க்க நான் போய் உட்கார்ந்து இருக்கிறேன். யாரும் என்னை பார்த்து விடக்கூடாது என்பதற்காக கேப், மாஸ்க் எல்லாம் போட்டு உட்கார்ந்து, பேப்பரை கிழிச்சு போட்டு ஒரு ஃபேன் மொமெண்ட்டை என்ஜாய் பண்ணேன். பக்கத்தில என்னோட படம் ஓடிக்கிட்டு இருக்கு. யாராவது படத்தை பார்த்து சொல்லி இருந்தா கூட பரவாயில்லை. நானே என்னோட படத்தை கம்மியா பேசுற மாதிரி இருந்து இருக்கும். அது எனக்கு மறக்க முடியாத FDFS " என பகிர்ந்து இருந்தார் சாந்தனு பாக்யராஜ்.
இப்படி ஏராளமான இளைஞர்களின் விருப்பமான FDFS காட்சி என்றால் அதில் மெஜாரிட்டி விஜய் படங்கள் தான்.