(Source: ECI/ABP News/ABP Majha)
Vijay: "கூலா இருங்க பாஸ்" மகாராஜா இயக்குநரிடம் விஜய் என்ன பேசினார்?
மகாராஜா படத்தைப் பார்த்த நடிகர் விஜய் படத்தின் இயக்குநர் நித்திலன் ஸ்வாமிநாதனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் நடிகர் தன்னிடம் கூறியதை இயக்குநர் பகிர்ந்துகொண்டுள்ளார்
மகாராஜா
விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவான மகாராஜா படம் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியானது. நிதிலன் ஸ்வாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, சிங்கம் புலி , முனிஷ்காந்த் , மம்தா மோகந்தாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கும் கதையே மகாராஜா. கதை வழக்கமானதாக இருந்தாலும் இப்படத்திற்கு நிதிலன் ஸ்வாமிநாதன் திரைக்கதை எழுதியிருந்த விதமே படத்தை ப்ளாக்பஸ்டர் வெற்றியாக மாற்றியது. நான் லீனியர் முறை கதைசொல்லல் , எதிர்பார்க்காத திருப்பங்கள் , உணர்ச்சிவசமான காட்சிகள் என மகாராஜா படம் தமிழ் , தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் பாராட்டுக்களை வாரி குவித்தது.
திரையரங்கைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியான மகாராஜா ஆச்சரியப்படும் விதமாக இந்தி ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. ஓடிடியில் வெளியான நாள் முதல் மகாராஜா படத்தின் காட்சிகளை இந்தி மீம் கிரியேட்டர்ஸ் புகழ்ந்து வருகிறார்கள். இந்தி ரசிகர்களிடையே இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக இப்படத்தை இந்தி ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மகாராஜா படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை பெற்றுள்ளதாகவும் இப்படத்தில் விஜய் சேதுபதி ரோலில் அவரே நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஜா இயக்குநரை சந்தித்த விஜய்
திரைத்துறையைச் சேர்ந்த பலர் மகாராஜா படத்தைப் பார்த்து பாராட்டுக்களை தெரிவித்தார்கள். நடிகர் விஜய் மகாராஜா படத்தைப் பார்த்து படத்தின் இயக்குநர் நிதிலன் ஸ்வாமிநாதனை நேரில் சந்தித்து பேசினார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவலாக ஷேர் செய்யப் பட்டது. நடிகர் விஜயுடனான சந்திப்பின் போது நடிகர் விஜய் தன்னிடம் கூறியதை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.
” நடிகர் விஜய் படத்தில் இருந்த சின்ன சின்ன டீடெயிலிங் எல்லாம் கவனித்து அதைப் பற்றி பேசினார். படத்தில் வில்லனாக நடித்திருக்கும் சிங்கம் புலியின் கதாபாத்திரம் வடிவமைக்கப் பட்ட விதம் பற்றியும் நிறைய பேசினார். நான் அவரிடம் உங்கள் முன் உட்கார்ந்திருப்பதற்கே பதற்றமாக இருப்பதாக கூறினேன். அதற்கு அவர் ‘கூலாக இருங்க பாஸ் , கூலா இருங்கள்’ என்று கூறினார். படத்தை நிறைய கோணங்களில் ஆராய்ந்து விஜய் சேதுபதி மற்றும் சிங்கம் புலியின் நடிப்பையும் பாராட்டி பேசினார்” என்று இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.