Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Maharaja Box Office Collection: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடித்து வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மகாராஜா திரைப்படம் வெளியானது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், சிங்கம் புலி, அபிராமி, நட்டி, பாரதிராஜா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கினார்.
இந்த திரைப்படம் அதன் திரைக்கதைக்காக பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், பாலியல் வன்முறையைக் கையாண்ட விதம் மற்றும் யு/ ஏ சான்றிதழ் உள்ளிட்ட காரணங்களால் இணையத்தில் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது.
பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் 'மகாராஜா': கலவையான விமர்சனங்கள் தாண்டி, இந்த திரைப்படம் வெளியானது முதலே வசூலில் சாதனை படைத்து வந்தது. விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றார்போல், பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக வசூலில் தொடர்ந்து மாஸ் காண்பித்து வந்தது.
இந்த ஆண்டின் அதிவேக 50 கோடி வசூலை எட்டிய படமாக மகாராஜா உருவெடுத்த நிலையில், தற்போது மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூல் எனும் மைல்கல்லை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
17 நாள்களில் இந்தியாவில் மட்டும் ரூ.76 கோடிகளுக்கும் மேலாக இந்த படம் வசூலித்துள்ள நிலையில், தற்போது உலக அளவில் மகாராஜா திரைப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகை உற்சாகப்படுத்திய விஜய் சேதுபதி: மேலும், அரண்மனை 4 திரைப்படம் ரூ.99 கோடிகளை மட்டுமே வசூலித்ததாகவும், விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் அந்த சாதனையை முறியடித்து ரூ.100 கோடி எனும் மைல்கல்லை எட்டிய இந்த ஆண்டின் முதல் தமிழ் படம் எனும் சாதனையைப் புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தாண்டு மலையாள சினிமாவுக்கு மாஸ் ஆண்டாக மாறி இருக்கிறது. அடுத்தடுத்து 100 கோடி வசூல் மழையை அம்மொழி படங்கள் புரிந்திருக்கின்றன. அதற்கு மாறாக தமிழ் சினிமா இந்த ஆண்டின் முதல் பாதியில் மந்தமாக இருந்தது.
அரண்மனை 4, கருடன், விஜய்யின் கில்லி ரீ-ரிலீஸ் ஆகிய சில திரைப்படங்கள் கைகொடுத்த நிலையில், இந்த வரிசையில் தற்போது மகாராஜா இடம்பெற்று தமிழ் சினிமா துறையினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதோடு, இந்தியன் 2, தங்கலான், ராயன், வேட்டையன், கங்குவா என இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் தமிழ் படங்கள் மூலம் வசூல் வேட்டை ரேஸில் கோலிவுட் மீண்டும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.