Trump Nigeria ISIS: நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
நைஜீரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தையும் தெரிவித்து, கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், கிறிஸ்தவர்களை கொன்ற பயங்கரவாதிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அவர் கூறியது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதிபர் ட்ரம்ப்பின் பதிவு என்ன.?
இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது உத்தரவின் பேரில், வடமேற்கு நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக, ஒரு சக்திவாய்ந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியது என்று தெரிவித்துள்ளார். மேரும், அவர்கள் பல ஆண்டுகளாக அப்பாவி கிறிஸ்தவர்களை குறிவைத்து கொடூரமாக கொன்று வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
அதோடு, கிறிஸ்தவர்களை படுகொலை செய்வதை நிறுத்தாவிட்டால், நரகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று தான் முன்பே அந்த பயங்கரவாதிகளை எச்சரித்ததாகவும், இன்றிரவு(நேற்று), அது நடந்தது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா மட்டுமே செய்யக்கூடியது போல, போர்த் துறை ஏராளமான சரியான தாக்குதல்களை நடத்தியது என்றும் தீவிர இஸ்லாமிய பயங்கரவாதம் செழிக்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும், “கடவுள் நமது ராணுவத்தை ஆசீர்வதிப்பார். இறந்த பயங்கரவாதிகள் உட்பட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.. அவர்கள் கிறிஸ்தவர்களை படுகொலை செய்வது தொடர்ந்தால், இன்னும் பல கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்“ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது பதிவின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ட்ரம்ப் நடத்திய தாக்குதலுக்கு காரணம் என்ன.?
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில். கிறிஸ்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்களை நிகழ்த்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இதற்கு அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது. அதோடு, நைஜீரியாவில் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களில், இஸ்லாமியர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், நைஜீயாவில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், சர்வதேச மத சுதந்திர சட்டத்தின் கீழ், அமெரிக்கா சமீபத்தில் 'குறிப்பிட்ட கவனத்திற்குரிய நாடு' என்று நைஜீரியாவை அறிவித்தது. மேலும், நைஜீரியாவில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பென்டகனுக்கு உத்தரவிட்டதாக ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தான், தற்போது நைஜீரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.





















