Actor Vishal: விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
லைகா நிறுவனத்திற்கு ரூ.21 கோடியை 30 சதவீத வட்டியுடன் நடிகர் விஷால் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியரான அன்புச்செழியனிடம் ரூ. 21.29 கோடி கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் விஷாலுக்கு பதிலாக செலுத்தியது. ஆனால், விஷால் லைகா நிறுவனத்திற்கு இந்த தொகையை திருப்பிச் செலுத்தவில்லை. இதனைத்தொடர்ந்து லைகா நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
லைகா நிறுவனம் வழக்கு
விஷால் தங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடியை வழங்காமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழியில் வெளியிட உள்ளதாகவும், சாட்டிலைட், ஓடிடி உரிமையை விற்க இருப்பதாகவும் தெரிகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் லைகா நிறுவனத்திற்கும், விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்னைக்கு தீர்வு காண சமரச அதிகாரியை நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சமரசத்திற்காக விஷால் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என லைகா நிறுவனம் வாதிட்டது.
சொத்து பட்டியல்
நீதிமன்ற உத்தரவின்படி, சொத்து விவரங்களை விஷால் தாக்கல் செய்தார். தன்னிடம் 3 கார்கள், ஒரு பைக் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். விஷாலின் இரண்டு வங்கி கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனக்கு சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் ஆஜரான விஷால் சுமார் 2.30 மணி நேரம் நீதிபதியின் கேள்விகளுக்கும், லைகா நிறுவன வழக்கறிஞரின் குறுக்கு விசாரணைக்கும் பதில் அளித்தார்.
ரத்னம் பட விவகாரம்
ரத்னம் படத்தில் நடித்திருந்த விஷாலுக்கு ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும் அதனை வழங்க வலியுறுத்தி விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து விஷாலுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளமான ரூ.2.60 கோடியை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் நீதிமன்றத்தில் செலுத்தியது இப்பட விவகாரம் முடிவுக்கு வந்தது. தற்போது திருமண குஷியில் இருக்கும் விஷாலுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது நான்கு ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. விஷாலின் தலையில் இடியை பாய்ச்சுவது போல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்டில் திருமணம்
விஷாலுக்கு எப்போது திருமணம் என்பது குறித்த செய்திகள் நாள்தோறும் பரவலாக பேசுபொருளானது. நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டிய பின்பே திருமணம் செய்துகொள்வதாக விஷால் தெரிவித்திருந்தார். தற்போது அந்த கனவும் நிறைவேறவுள்ளது. அதேபோன்று அவரது திருமணமும் ஆகஸ்டில் நடக்க இருக்கிறது. இதனை விஷாலின் காதலியும் வருங்கால மனைவியுமான சாய் தன்ஷிகா யோகிடா பட விழாவில் அறிவித்தார். பேபி என அழைத்ததும் விஷால் வெட்கப்பட்டார். கோலிவுட் வட்டாரத்தில் பலருக்கும் ஷாக்கிங் ஆக இருந்திருக்கலாம். விஷால் - சாய் தன்ஷிகா திருமணத்திற்கு 2 மாதங்களே உள்ள நிலையில் முக்கிய நபர்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
விஷாலுக்கு அதிரடி உத்தரவு
லைகா நிறுவனம் விஷால் மீது வழக்கு தொடர, விஷாலும் லைகா நிறுவனம் மீது ஜிஎஸ்டி தொகை செலுத்த வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தார். இருதரப்பும் மாறி மாறி புகார் தெரிவித்து வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் விஷாலுக்கு அதிரடியான தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவால் லைகா நிறுவனம் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. அதாவது, லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடியை 30 சதவீத வட்டியுடன் நடிகர் விஷால் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கின் செலவுத்தொகையையும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.




















