Casteist Memes : கலைஞனை கொண்டாடுவது சரி.. முட்டாள் கதாப்பாத்திரத்தை எதற்கு? : பொறுப்பை மறந்த மீம் கிரியேட்டர்ஸ்!
சமூகவலைதளம் ஏற்படுத்தும் தாக்கம் நேரடியாக சமூகத்தில் பிரதிபலிக்கும் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள்ளன.
இந்தியாவில் கல்வி அறிவு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு 82.9 சதவீதத்துடன் 8-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலை கடந்த 2020-ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்டது. இதனைப் பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது.
சட்டமேதை அம்பேத்கர், நேர்மையும் எளிமையும் இல்லாது கல்வி அறிவு மட்டும் உடையவர்கள் மிருகத்தை விட ஆபத்தானவர்கள் என்கிறார். நமது தமிழ்ச் சமூகம் இன்னும் நாகரீகம் அடையாத காட்டுமிராண்டிச் சமூகம் என யாராவது கூறினால் அப்போது உங்களது மனநிலை எப்படி இருக்கும்? ஆனால் இந்தக் கேள்வியை யாரோ ஒருவர் நம்மை நோக்கி கேட்பதற்கு முன்னர் நாமே நம்மை நோக்கி கேள்வி எழுப்பி சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது.
வருத்தத்திற்குரிய விஷயமாக இது இருந்தாலும் இதனை விவாதத்திற்கு கொண்டு வர முக்கிய காரணம், இன்றைய இளைய (இணைய) சமுதாயத்தின் ஒரு சிறு கூட்டம்தான். இன்றைய சமுதாயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள, அவர்கள் பின்தொடரும் சமூகவலைதளப் பக்கங்களையும் சமூக வலைதள பதிவுகளையும் பார்த்தாலே போதும். எளிதில் அவர்களின் எண்ண ஓட்டத்தை, அவர்கள் விரும்பும் அரசியல் சித்தாந்தத்தை கண்டுபிடித்துவிட முடியும்.
இணையத்தில் இப்போது மிகவும் வைரலாக உள்ள ஒரு விசயம், மாமன்னன் படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தை மீம் கிரியேட்டர்கள் ஏதோ தியாகியைப் போலவும், சமூகத்தை நல்வழிப்படுத்தும் தலைவரைப் போலவும் சிலாகித்து கொண்டாடி வருவதுதான்.
மாமன்னன் படத்தின் மூலம் ஒட்டுமொத்த படக்குழுவும் சொல்ல வருவது, சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதும், இருக்கும் ஏற்றத்தாழ்வை களைய வேண்டும் என்பதும்தான். அப்படியான கருத்தை தாங்கி வந்த இந்தப் படத்தின் வில்லன், சாதிய ஏற்றத்தாழ்வை விரும்புபவராகவும், அதனை தனது கௌரவம் என எண்ணும் முட்டாள் கதாப்பாத்திரமாகவும் இருப்பவர்தான் இரத்தினவேலு.
இப்படியான முட்டாள் கதாப்பாத்திரத்துக்குள் இருக்கும் வன்மத்தை, தனது அசாத்திய நடிப்பால் வெளிக்காட்டியிருப்பார் ஃபகத் ஃபாசில். கொடுக்கும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு அந்த காதாப்பாத்திரமாக ஃபகத் ஃபாசில் வாழ்வார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மாமன்னன் இப்போது திரையரங்கைக் கடந்து ஓடிடியிலும் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாக்ஸ் ஆஃபிஸிலும் ரூ.72 கோடிகள் வரை வசூலை அள்ளியுள்ளது.
இப்படம் ஓடிடி தளத்தில் வெளியான பின்னர், படத்தில் ரத்தினவேலு கதாப்பாத்திரம் இடம்பெற்றுள்ள காட்சிகளை தனியாக வெட்டி அந்தக் கதாப்பாத்திரத்தை சமூகத்தை நல்வழிப்படுத்தும் தலைவரைப் போல் சித்தரித்து மீம் கிரியேட்டர்கள் பல சினிமா பாடல்களை இணைத்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இதில் வேதனைக்குரிய விஷயம், இவற்றை பலர் லைக் செய்து வருவதும், தங்களது சமூகவலைதளத்திலும் அப்படியான பதிவுகளை பதிவிடுவதும்தான். தனது தொழில்நுட்பக் கல்வி அறிவுடன் படைப்பாற்றல் கொண்ட மீம் கிரியேட்டர்கள் சமூகத்தை நல்வழிப்படுத்தும் மீம்களை பதிவிடும் பொறுப்பு உள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து இதுபோன்ற வீடியோக்களை பதிவிடுவது, சாதிய ஏற்றத்தாழ்வு எண்ணமுடையவர்கள் மத்தியில் தங்களது எண்ணம் சரி என்ற மனநிலையை ஊக்குவிக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு மீம் கிரியேட்டருக்கு உள்ள தார்மீக பொறுப்பு என்பது, தனது மீம் பேஜ்ஜை ஃபாலோ செய்பவர்களை ஒருபோதும் தவறாக வழிநடத்தக்கூடாது என்பதில் தொடங்கி, தனக்கான குறைந்தபட்ச அறமாக சமூகத்தை பிளவு படுத்தும் நிகழ்வுகளை தவறு எனச் சுட்டிக்காட்டுவதாக இருக்க வேண்டும்.
கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 1,255 சாதிய வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படியான சமூகத்தில் மீம் கிரியேட்டர்கள் தங்களின் திறமையை ஏற்கனவே கூர்மையாக உள்ள முட்டாள்தனத்திற்கு கொம்பு சீவி விடுவதில் தெரிந்தோ, தெரியாமலோ காண்பிக்கிறார்கள். சமூகவலைதளம் ஏற்படுத்தும் தாக்கம் நேரடியாக சமூகத்தில் பிரதிபலிக்கும் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள்ளன.
ஃபகத் ஃபாசில் போன்ற நல்ல நடிகரின் நடிப்பைக் கொண்டாடுவது தவறல்ல. ஆனால் அப்படியான கொண்டாட்டம் மூலம் சமூகப்பிளவை ஆதரிக்கும் செயலுக்கு இணையவாசிகளை மடைமாற்றம் செய்வது கட்டாயம் தவிர்க்கப்படவேண்டியது. இதில் நல்ல விஷயம் என்றால், சாதிய எண்ணம் கொண்டவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதையும், அதனை எதிர்ப்பவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதையும் லைக்குகளிலும் கமெண்டுகளிலும் பார்க்க முடிகிறது. மேலும் மீம் கிரியேட்டர்களும் நம்முடன்தான் இருக்கிறார்கள். இவர்களையும் சரியான திசைக்கு நகர்த்தவேண்டிய பொறுப்பு இச்சமூகத்திற்கும் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.