Palani Bharathi Birthday: என்ன..? இந்த பாடல்களெல்லாம் இவர் எழுதியதா? - பிறந்தநாளில் மனதை மயக்கும் கவிஞர் பழனிபாரதியின் பாடல்கள்!
கவிஞரும், பாடலாசிரியருமான பழனி பாரதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பாடல்களை பற்றிய சிறு தொகுப்பை பார்க்கலாம்.
கவிஞர் பழனி பாரதி பெரும்புள்ளி என்ற திரைப்படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானார். இவர் பல்வேறு பத்திரிகைகளில் பத்திரிகையாளராகவும் பணியாற்றிவர். காதலுக்கு மரியாதை, உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட திரைப்படங்களில் எழுதிய பாடல்களுக்காக விருதுகள் பெற்றுள்ளார். என்னை தாலாட்ட வருவாளா என்ற பாடலுக்கு இவர் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றார்.
”கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்.. நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்... நாளைக்கு நான் காண வருவாளோ... பாதைக்கு நீர் ஊற்றி போவாளோ... என்று அவர் எழுதிய பாடல் வரிகள் அன்றைய காலகட்டத்தில் காதலை சொல்லிவிட்டு பதிலுக்காக காத்திருக்கும் இளைஞர்களின் இளம் நெஞ்சை பிசையாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்லலாம்.
நந்தா திரைப்படத்தில் இடம்பெற்ற முன் பனியா பாடல் பழனி பாரதியின் வரிகளில் உருவானது. இப்பாடலில் இடம்பெறும் “இதுவரை எனக்கில்லை முகவரிகள் அதை நான் கண்டேன் உன் புன்னகையில், வாழ்கிறேன். நான் உன் மூச்சிலே” என்ற வரிகளில் புதிதாய் முளைத்த காதலின் உணர்வுகள், கவிதையாய் வெளிப்படும்.
பிதா மகன் படத்தில் இடம்பெற்ற இளங்காத்து வீசுதே பாடல், இளையராஜாவின் இசையில், பழனி பாரதியின் வரிகளில் உருவானது. இந்த பாடலை கண்களை மூடி கேட்டால் தென்றலே வந்து நம்மை தாலாட்டுவது போல் இருக்கும் தானே. அதிலும் குறிப்பாக , ”நேத்து தனிமையில போச்சு. யாரும் துணை இல்ல. யாரோ வழித்துணைக்கு வந்தால், ஏதும் இணை இல்லை” என்ற வரிகள் தனிமையின் வலியை மிக அழகாய் சொல்லும்.
மனசெல்லம் படத்தில் இடம் பெற்ற ’நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காதே’ என்ற பாடலில் இடம் பெறும் ”ஒரு மூச்சு இரு தேகம், வாழ்வது நாமன்றி வேறாறோ”என்ற வரிகள் எல்லாம், காதலர்களின் கவிதை வரிகளை பாடலாய் படிப்பது போன்று இருக்கும்.
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் நியாபகம் பாடலில் வரும், "உந்தன் முகம் பார்த்த பின்னே கண் இழந்து போவதென்றால், கண்கள் ரெண்டை நான் இழப்பேன் இப்போதே நான் இப்போதே" என்ற வரிகளை எல்லாம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
அழகி படத்தில் வரும் உன் குத்தமா என் குத்தமாக படலில் வரும், ”நிலவோட மணலோட ,தெருமண்ணு ஒடம்போட ,விளையாண்டது ஒரு காலம் ,அலஞ்சாலும் திரிஞ்சாலும் ,அழியாத கலையாத ,கனவாச்சு இளம் காலம் ,என்ன எதிர்காலமோ ?என்ன புதிர் போடுமோ” என்ற வரிகள், பிரிவின் வலிகளையும், கடந்த கால நினைவுகளையும் அழகாய் நிழலாட வைக்கும்.
“ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்” “சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும்” ” கடவுள் தந்த அழகிய வாழ்வை” உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் எழுதி உள்ளார்.
”தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே” உள்ளிட்ட இவரின் ஏராளமான பாடல்கள் நிச்சயம் நம் பேவரட் லிஸ்ட்டில் இருக்க கூடும்.
அழகான பாடல்களை கவிதைகளாக வடித்து ,செவிகளுக்கு விருந்தளிப்பதில், கைதேர்ந்த எழுத்தாளர் பழனிபாரதியை அவரின் பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறது ஏ.பி.பி நாடு.