Lokesh Kanagaraj: “விஜய் கெட்ட வார்த்தை பேச நான் தான் காரணம்” .. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்..!
லியோ படத்தில் விஜய் கெட்டவார்த்தை பேச நான் தான் கட்டாயப்படுத்தினேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
லியோ படத்தில் விஜய் கெட்டவார்த்தை பேச நான் தான் கட்டாயப்படுத்தினேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் “லியோ”. இந்த படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத், அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அனுராக் காஷ்யப், ஜனனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு உலகமெங்கும் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் இந்திய சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. லியோ படமானது தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படியான நிலையில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று வெளியானது. தொடர்ந்து அன்றைய தினம் விஜய் பாடிய “நான் ரெடி” பாடல் வெளியாகி 100 மில்லியன் பார்வைகளை யூட்யூபில் கடந்துள்ளது.
இப்படியான நிலையில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவிருந்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா பல காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ரசிகர்களை சமாதானப்படுத்த படத்தின் 2ஆம் பாடலான “பேட் தாஸ்” பாடல் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியானது.
ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளோடு இருக்கும் அந்த ட்ரெய்லரின் ஒரு இடத்தில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் அதிர்ச்சியடைந்தனர். விஜய்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் படக்குழு மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லியோ படத்தில் விஜய் கெட்டவார்த்தை பேச நான் தான் காரணம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில், “முதலில் நீங்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். படத்தில் கெட்ட வார்த்தை பேசியது விஜய் அல்ல, அது ஒரு கேரக்டர் அவ்வளவு தான். அந்த காட்சி 6 நிமிடம் ஓடக்கூடியது. அதில் அந்த கேரக்டர் இயலாமை மற்றும் கோபத்தின் வெளிப்பாடாக பேசுவதாக இருக்கும். விஜய் அந்த வார்த்தையை பேசுவதற்கு முன் அது ஓகே வா, நான் பேசலாமா என கேட்டார். நான் தான் அவரை கட்டாயப்படுத்தி பேச வைத்தேன். யாராவது அந்த வார்த்தையால் அதிருப்தியாகி இருந்தால் அதற்கு முழு பொறுப்பு நான் மட்டும் தான்” என லோகேஷ் அதில் கூறியுள்ளார். இதனால் விஜய் மீதான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Leo Trailer: லியோ ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை பேசிய விஜய்.. போலீசில் புகார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!