Watch Video: அப்போ ஏ.ஆர்.ரஹ்மான், இப்போ அனிருத்.. ‘லியோ’ பட பாடலை பங்கம் செய்த விக்கல்ஸ்!
விக்கல்ஸ் குழுவினர் பகிர்ந்துள்ள லியோ திரைப்படத்தின் பேட் ஆஸ் பாடல் உருவான விதம் பற்றிய கற்பனை வீடியோ, இணையதளத்தில் வைரலாகி வருகிறது
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஸ்கின், கெளதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடித்து அனிருத் இசையமைத்துள்ளார்.
7 ஸ்க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் லியோ திரைப்படத்தில் ட்ரெய்லர் வெளியாகி இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகியது. மேலும் நடிகர் விஜய் ட்ரெய்லரின் வசவு சொற்களைப் பயன்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் சமூக விமர்சகர்கள் இந்த ட்ரெய்லரை விமர்சித்தனர்.
விக்கல்ஸ்
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பகிரும் பல்வேறு குழுக்கள் இருந்தாலும் சமீப காலங்களில் மக்களால் அதிக ரசிக்கப்படும் வீடியோக்கள் என்றாக் விக்கல்ஸ் குழுவை சொல்லலாம். திரைப்படங்களில் இடம்பெறும் பல்வேறு பாடல்கள் எப்படி உருவாகி இருக்கும் என்று நகைச்சுவையான கற்பனைகள் மூலம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு வரும் குழு விக்கல்ஸ்.
இதில் சில வீடியோக்கள் பயங்கரமாக வைரலாகி இருக்கின்றன. குறிப்பாக சிலம்பரசன் நடித்து வெளியான பத்து தல படத்தில், ரஹ்மான் இசையில் உருவான ‘ராவடி’ பாடலை ரீல்ஸாக இவர்கள் பதிவிட்டிருந்தனர். இதில் ராவடி பாடலைப் பாடிய பாடகி சுவா ராவடி என்பதற்கு பதிலாக ராப்பரி என்று பாடுவதாக அவர்கள் நகைச்சுவையாக மாற்றி இருந்தார்கள்.
இதனை கவனித்த இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், தன் சார்பில் அதே மாதிரியா ஒரு ரீலை பாடகர் சுபா மற்றும் பாடலாசிரியர் சினேகனுடன் இணைந்து வெளியிட்டார். இந்த வீடியோ விக்கல்ஸ் குழுவிற்கு மேலும் கவனத்தைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது லியோ திரைப்படத்தின் பாடல் ஒன்றையும் இதே மாதிரியான வீடியோவாக வெளியிட்டிருக்கிறது விக்கல்ஸ் குழு.
பேட் ஆஸ் பாடல்
#Badass song recording be like 😅😂 !!!!#Leo @anirudhofficial @actorvijay pic.twitter.com/ifTKr8jlCU
— Vijay Social Teamⱽˢᵀ (@TST_Offcl) October 8, 2023
லியோ திரைப்படத்தில் முதல் பாடலான நான் ரெடிதான் பாடலைத் தொடர்ந்து இரண்டாவது பாடலான பேட் ஆஸ் பாடல் வெளியிடப்பட்டது. அனிருத் இந்தப் பாடலைப் பாடியிருந்தார். வழக்கம்போல் அனிருத்தின் ராக்ஸ்டார் ஸ்டைலில் இந்த பாடல் அமைந்து ரசிகர்களால் ரிப்பீட் மோடில் கேட்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த பாடல் உருவான பின்னணியை கற்பனையாக வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது விக்கல்ஸ் குழு. அதில் கோரஸ் பாடுபவர்களை அனிருத் ஸ்டுடியோவிற்கு வெளியே இருந்தே பாடியபடி உள்ளே வர சொல்லுவது போல் கற்பனை செய்திருந்தனர். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
லியோ பிரீமியர் ஷோ
லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்டோபர் 18 ஆம் தேதி மாலை மற்றும் இரவு மட்டும் ப்ரிமீயர் காட்சிகள் திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே லியோ படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.