Leo Global Box office: 'கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்' படத்தின் வசூலை முறியடித்த 'லியோ'... பாக்ஸ் ஆபிஸில் சாதனை
Leo Global Box office : வீக்கெண்ட் குளோபல் பாக்ஸ் ஆபிஸில் லியோனார்டோ டிகாப்ரியோவின் 'கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்' படத்தை முறியடித்தது விஜய்யின் 'லியோ' திரைப்படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் அக்டோபர் 19ம் தேதி வெளியான திரைப்படம் "லியோ". வார இறுதி நாட்களின் வரிசையில் ஞாயிற்றுக்கிழமை வெளியான உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் காம்ஸ்கோர் வரிசையில் 31.2 மில்லியன் டாலர்களை வசூலித்து மூன்றாவது இடத்தை கைப்பற்றி இருந்தது லியோ திரைப்படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் இந்திய அளவில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குளோபல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் :
லியோனார்டோ டிகாப்ரியோ, ராபர்ட் டி நீரோ மற்றும் லில்லி கிளாட்ஸ்டோன் நடிப்பில் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் “கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்” திரைப்படம் வார இறுதியில் 44 மில்லியன் டாலர்களை வசூலித்து இருந்தது. அதற்கு அடுத்த இடத்தில் "டெய்லர் ஸ்விஃப்ட்: தி ஈராஸ் டூர்" திரைப்படம் 41.5 மில்லியன் டாலரையும் வசூலித்திருந்தது. அந்த வரிசையில் புதிய வெளியீடுகளின் அடிப்படையில் நான்கு நாட்களில் 48.5 மில்லியன் டாலர்களை வசூலித்து "கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்" வசூலித்த 44 மில்லியன் டாலர்களையும் தாண்டி வசூல் செய்துள்ளது.
லியோ டீம் :
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கீழ் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி தயாரிப்பில் ஆக்ஷன்-த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா கிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியன், பிரியா ஆனந்த் மற்றும் மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அமெரிக்காவில் லியோ திரைப்படத்தை பிரத்யங்கிரா சினிமாஸ் நிறுவனம் வெளியிட்டது. வார இறுதியில் மட்டும் 2.1 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது. யுகே மற்றும் அயர்லாந்தில் வெளியிட்ட அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முதல் மூன்று நாட்களில் 1.3 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது என தகவல்கள் தெவிக்கின்றன.
லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் :
தமிழ் சினிமாவில் மோசட் வான்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தனது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் கைதி, விக்ரம் படத்தை தொடர்ந்து லியோ மூன்றாவது படைப்பாகும். விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான "மாஸ்டர்" படம் 36 மில்லியன் டாலர்களை வசூலித்தது. அதை தொடர்ந்து விஜய் நடித்த பீஸ்ட் மற்றும் வாரிசு படங்கள் அதே அளவு வசூல் செய்தது.
விக்ரம் சாதனை :
லோகேஷ் கனகராஜின் முந்தைய ரிலீசான கமல்ஹாசன் நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான 'விக்ரம்' திரைப்படம் 60 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது. அந்த ஆண்டில் அதிகம் வசூலித்த இந்திய படம் என்ற பெருமையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.