Vani Jayaram: கானக்குயில் வாணி ஜெயராமின் முதலாமாண்டு நினைவு தினம் - ரசிகர்கள் அஞ்சலி
கடந்தாண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் வாணி ஜெயராம் கண்டெடுக்கப்பட்டார்.
மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கடந்தாண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் வாணி ஜெயராம் கண்டெடுக்கப்பட்டார். அவரது மறைவு ஒட்டுமொத்த இசையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. கோடிக்கணக்கான ரசிகர்களை தன் இனிய குரலால் வசீகரித்த வாணி ஜெயராம் உயிரிழந்த போது அவருக்கு 78 வயதாகி இருந்தது.
வேலூரில் பிறந்த வாணி ஜெயராம் முறைப்படி கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசை பயின்றார். சிலோன் வானொலியில் ஒலிபரப்பான லதா மங்கேஷ்கர், முகம்மது ரபி, மன்னா டே ஆகியோரின் பாடல்களைக் கேட்டு திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பாரம்பரிய இசை குடும்பத்தில் பிறந்த அவர் பின்னாளில் இந்தியா போற்றும் பாடகியாக உயர்ந்தார்.
சென்னை வந்து ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த வாணிக்கு வங்கியில் வேலை கிடைத்தது. ஆனால் அவரின் இசை ஆர்வம் பற்றி அறிந்த கணவர் ஜெயராம் அதில் கவனம் செலுத்த ஊக்குவித்தார். இதன் காரணமாக உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டார்.
Her unique voice and her memorable songs will keep her alive.#RIP #VaniJeyaram pic.twitter.com/1EtqteJTFg
— DKN (@DineshK_N) February 4, 2023
1971 ஆம் ஆண்டு குட்டி என்ற இந்தி படத்தில் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம். அவர் 1974 ஆம் ஆண்டு தீர்க்க சுமங்கலி படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல் பாடி தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை வாணி ஜெயராம் பாடியிருந்தார். அதேபோல் 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் ஏழு ஸ்வரங்களுக்குள் என்ற பாடலை பாடி அனைவரையும் சொக்க வைத்தார்.
பழம்பெரும் இசையமைப்பாளர்களான ஜி. தேவராஜன், எம்.எஸ். விஸ்வநாதன் தொடங்கி, இளையராஜா வரை பாடியிருந்தார் வாணி ஜெயராம். அவரின் இசை அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. ஆனால் அதை பெறாமலேயே அவர் உயிரிழந்தார் என்பது சோக வரலாறு.
இன்று வாணிஜெயராம் மறைந்து முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர் பாடிய பாடல்களை எல்லாம் ஸ்டேட்டஸ் வைத்து தங்கள் நினைவுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறன்றனர். எது எப்படியோ இசைக்கு என்றும் அழிவு இல்லை, அதேபோல் குயில் கூவுவதை நிறுத்தாத வரை என்றும் இந்த கானக்குயிலுக்கு ஓய்வே கிடையாது..!