41 Years of Gopurangal Saivathillai: இயக்குநரான மணிவண்ணன்.. அசத்திய ‘அருக்காணி’ கேரக்டர்.. “கோபுரங்கள் சாய்வதில்லை” ரிலீசான நாள் இன்று..!
நடிகர் மோகனின் நடிப்பில் ரீலிசாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “கோபுரங்கள் சாய்வதில்லை” வெளியாகி இன்றோடு 41 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
நடிகர் மோகனின் நடிப்பில் ரீலிசாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “கோபுரங்கள் சாய்வதில்லை” வெளியாகி இன்றோடு 41 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
மணிவண்ணன் இயக்குநராக அறிமுகமான படம்
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றிய மறைந்த நடிகர் மணிவண்ணன் இயக்குநராக அறிமுகமான படம் “கோபுரங்கள் சாய்வதில்லை”. 1982 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியான இப்படத்தில் மோகன், சுஹாசினி, ராதா, எஸ்.வி.சேகர், வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
பொருத்தமில்லா திருமணங்களை மையப்படுத்திய படங்கள் தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. அந்த அளவுக்கு ஆண்டுக்கு குறைந்தப்பட்சம் ஒரு படமாவது இன்றளவும் வெளியாகி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு கதை தான் கோபுரங்கள் சாய்வதில்லை. அருக்காணி (சுஹாசினி) என்ற பெயருடன் சற்று அசிங்கமான முகம் கொண்ட சுஹாசினியை, தன் தந்தை வினுசக்கரவர்த்தி வற்புறுத்தலால் மோகன் திருமணம் செய்துக் கொள்வார்.
திருமணம் முடிந்து வேலைக்கு வந்தால் அங்கும் அருக்காணியால் கூனிக்குறுகி மனம் வெதும்பி நிற்கிறான். இப்படியான நிலையில் அலுவலகம் சார்பாக வெளிமாநிலத்தில் நடக்கும் விழாவில் விருது வாங்குகிற ராதாவை சந்திக்கிறார் மோகன். கண்டதும் காதல் பூக்கிறது. உடனே பெங்களூருவில் இருந்து ராதா வந்திருப்பதை அறிந்துக் கொண்டு ஊருக்குச் சென்றவுடன் பெங்களூருவுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு சென்று ராதாவை சந்தித்து காதலை தெரிவித்து ஏற்கனவே திருமணமானதை மறைத்து திருமணம் செய்து கொள்கிறார்.
இதனிடையே ஊரில் இருக்கும் அருக்காணியை தந்தை வற்புறுத்தலால் பெங்களூருவுக்கு கூட்டிச் சென்று, ரயில் நிலையத்திலேயே விட்டு விடுகிறார். அருக்காணியை மீட்கும் ராதாவின் அண்ணனான எஸ்.வி.சேகர் அவரை தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அங்கு பார்த்தால் தன் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதை எண்ணி அதிர்ச்சியடைகிறாள். சுஹாசினி தான் மோகனின் முதல் மனைவி என்பது ராதாவுக்கு தெரிந்ததா?, பிறகு என்ன நடந்தது என்பதே இப்படத்தின் கதையாகும்.
வெள்ளிவிழா கொண்டாடிய படம்
கோபுரங்கள் சாய்வதில்லை திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக்கோலம் பூண்டது. குடும்பத்துடன் காண வேண்டிய படம் என ரசிகர்கள் வெள்ளி விழா கொண்டாட வைத்தார்கள். அருக்காணியாக நடித்து அசத்தியிருந்தார் சுஹாசினி. தனக்கு நடிப்பு மட்டும்மல்லாமல் காமெடியும் சிறப்பாக வரும் நிரூபித்தார் மோகன். காலங்கள் பல கடந்தும் அருக்காணி என்றால் எப்படி டக்கென்று சுஹாசினி நம் மனதில் வந்து நிற்கிறாரோ அதேபோல் தான் கோபுரங்கள் சாய்வதில்லை ஒரு காலத்துக்கும் ஏற்ற படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது..!