Lal Salaam: ரஜினிக்கு ஜோடியாகும் ‘அக்னி நட்சத்திரம்’ பட நடிகை நிரோஷா? லால் சலாம் பட அப்டேட்!
நிரோஷா தன் கரியரின் உச்சத்தில் இருந்தபோது கூட நடிகர் கமல் உடன் மட்டுமே ஜோடி சேர்ந்திருந்தார். ரஜினியுடன் நடிக்கவில்லை.
லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் தற்போது தன் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். '3’, ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப்ப் பிறகு ‘லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் கௌரவக் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இப்படத்தில் 90களின் பிரபல நடிகை நிரோஷா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளும், நடிகை ராதிகா, நடிகர் ராதாரவி ஆகியோரின் இளைய சகோதரியுமான நிரோஷா, 80களின் இறுதியில் கோலிவுட்டில் அறிமுகமாகி பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார்.
மணிரத்னத்தில் அக்னி நட்சத்திரம் படத்தில் அறிமுகமான நிரோஷா, ‘ஒரு பூங்காவனம்’, ‘வா வா அன்பே, அன்பே’ பாடல்களின் மூலம் அன்றைய இளைஞர்களை முதல் படத்திலேயே ஈர்த்து லைக்ஸ் அள்ளினார். தொடர்ந்து தன் அடுத்த படத்திலேயே நடிகர் கமல்ஹாசனுடன் சூரசம்ஹாரம் படத்தில் ஜோடி சேர்ந்தார்.
அதன் பின் ‘செந்தூரப்பூவே’, ‘பாண்டி நாட்டுத்தங்கம்’, ‘இணைந்த கைகள்’ என தொடர் ஹிட் படங்களில் நடித்த நிரோஷா, செந்தூரப்பூவே படத்தில் நடித்தபோது பிரபல நடிகர் ராம்கியுடன் காதலில் விழுந்தார். தமிழ் தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ள நிரோஷா, 1995ஆம் ஆண்டு ராம்கியை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.
அதன் பின், சிறிது இடைவெளி எடுத்து குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிய நடிகை நிரோஷா, இறுதியாக தமிழில் ராஜவம்சம் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது 52 வயது நிரம்பிய நிரோஷா, 72 வயது நிரம்பிய நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லால் சலாம் படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
நிரோஷா தன் கரியரின் உச்சத்தில் இருந்தபோது கூட நடிகர் கமல் உடன் மட்டுமே ஜோடி சேர்ந்திருந்த நிலையில், தற்போது முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்துக்கு அவர் ஜோடியாக நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
முன்னதாக இதேபோல் 80களின் பிரபல நடிகை ஜீவிதா ரஜினிகாந்துக்கு தங்கையாக இப்படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், நடிகர் செந்திலும் இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.