தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை... காமெடியன்களுக்கு திடீர் பஞ்சம் - கட்டியாளப்போவது யார்?
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் சந்தானம், யோகிபாபு, சூரி தற்போது கதாநாயகர்களாக நடிப்பதால் காமெடி நடிகர்களுக்கு திடீர் பஞ்சம் உண்டாகியுள்ளது.

தமிழ் திரையுலகம் உலகளவில் இந்திய சினிமாவை கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் எந்தளவு பிரபலமானவர்களோ, அதே அளவிற்கு காமெடி நடிகர்கள், குணச்சித்திர நடிகர்களும் மிகவும் பிரபலமானவர்களே உலா வருகின்றனர்.
காமெடியன்கள் சாம்ராஜ்யம்:
என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், நாகேஷ், கவுண்டமணி, செந்தில், எஸ்.எஸ்.சந்திரன், ஜனகராஜ், சின்னி ஜெயந்த், விவேக், வடிவேலு, கஞ்சா கருப்பு, சந்தானம், சூரி, யோகிபாபு என தமிழ் சினிமாவில் அன்றில் இருந்து இன்று வரை காமெடியன்கள் என்றாலே இவர்கள் நினைவுக்கு வருவது உண்டு.
ஆனால், சமீபகாலமாக தமிழ் சினிமாவில் காமெடியன்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். ஏனென்றால், நல்ல தரமான குடும்ப கதையம்சம் கொண்ட படங்களை இயக்குனர்கள் மிகப்பெரிய கதாநாயகனையோ, வளர்ந்து வரும் கதாநாயகனையோ வைத்து எடுப்பதை காட்டிலும் காமெடி நடிகர்களை வைத்து எடுக்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது.
கதாநாயகன் அவதாரம் எடுத்த காமெடியன்கள்:
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகிய சந்தானம், யோகிபாபு, சூரி என்று கதாநாயகன்களாகவே நடிக்கின்றனர். யோகிபாபு முன்னணி கதாநாயகர்களின் படங்களில் காமெடியனாக நடித்தாலும் அதுவும் சில காட்சிகளாகவே இருக்கிறது. முதன்மை கதாபாத்திரமாக உள்ள படங்களிலே அதிகளவில் அவர் நடித்து வருகிறார்.
சந்தானம் தொடர்ந்து கதாநாயகனாகவே கடந்த சில ஆண்டுகளாகவே நடித்து வருகிறார். விடுதலை படம் தந்த வெற்றி, சூரியின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான கருடன், விடுதலை 2, மாமன் படங்களின் வெற்றி சூரியை முழு நேர கதாநாயகனாகவே மாற்றியுள்ளது. இனி அவர் நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கு சாத்தியம் இல்லை என்றே கருதப்படுகிறது.
குணச்சித்திரத்திலும் அசத்தல்:
காளிவெங்கட், கருணாகரன், ஆர்ஜே பாலாஜி, முனிஷ்காந்த் போன்றோருக்கும் நல்ல தரமான கதையம்சம் கொண்ட படங்கள் அடுத்தடுத்து அமைந்து வருகிறது. இதனால், அவர்களும் கதாநாயகனுடன் சேர்ந்து காமெடி செய்யும் வேடங்களை காட்டிலும் நல்ல கதாபாத்திரம் கொண்ட, நடிப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த வடிவேலுவிற்கு மாமன்னன் படத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால், அதன்பின்பு அவருக்கு குணச்சித்திர கதாபாத்திரங்கள் குவிந்து வருகிறது. மேலும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வந்த வடிவேலுவின் நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் எடுபடாத காரணத்தால் அவரும் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கே முக்கியத்துவம் அளித்து நடித்து வருகிறார்.
காமெடியன்களுக்கு பஞ்சம்:
தமிழ் சினிமாவின் காமெடி பிற மொழி படங்களில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்ற வரலாறு கொண்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமா ஒரு முழு நேர காமெடியன் இல்லாமல் தத்தளித்து வருகிறது. இந்த வெற்றிடத்தை ஏதாவது ஒரு நடிகர் காமெடியனாக உச்சம் பெறுவாரா? என்பதை காலமே தீர்மானிக்கும்.





















