Paruthiveeran Kutty Sakku: அன்று குட்டிச்சாக்கு... இன்று பெரிய சாக்கு மூட்டைகளை தூக்கும் சுமைத் தொழிலாளி... பருத்திவீரன் டூ வருத்த வீரன்!
Paruthiveeran Kutty Sakku: குட்டிப்பையன் இப்போ பெரிய இளைஞராக வளர்ந்து நிற்கிறார். ஆனால், குட்டிப்பையனா இருந்த போது கிடைத்த வளர்ச்சி, இப்போது இல்லை என்பது தான் வருத்தமான விசயம்.
‛ஏ முத்தழகு...’ என , பருத்துவீரனில் வாய் நிறைய வாய் மொழிந்த குட்டிச்சாக்குவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. வித்தியாசமான தோற்றத்தில், வினோத ஸ்லாங்கோடு பருத்துவீரனில் வலம் வந்த குட்டிச்சாக்கு என்ன ஆனார், எங்கு போனார் என்றெல்லாம் , அவர் நடித்த காட்சிகள் வரும் போது தோன்றும். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அவர், தற்போது மதுரையில் லோடு மேனாக உள்ளார். ஆம்... குட்டிச்சாக்கு... இப்போது பெரிய லோடு சாக்குகளை தூக்கிக் கொண்டிருக்கிறார்.
விமல்ராஜ் என்கிற உண்மையான பெயரை படம் வரும் போது பலரும் மறந்து போய்விட்டனர். இப்போது, குட்டிச்சாக்கு இவர் தானா என்று அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து, திருமணம் எல்லாம் செய்துவிட்டார். மாடு வளர்ப்பில் அதீத நாட்டம் கொண்ட அவர், அதற்காக சந்தித்த இழப்புகள் அதிகம். ஆனாலும், அவற்றிக்காக, அவற்றின் இரைக்காக லோடு மேன் வேலை பார்த்து வருகிறார். இது குறித்து இணையதளத்திற்கு குட்டைச்சாக்கு என்கிற விமல் அளித்த பேட்டி இதோ:
‛‛7ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, பள்ளியில் வைத்து என்னையும், ப்ரியாமணிக்கு சிறு வயது பெண்ணாக நடித்த பெண்ணையும் பார்க்க வந்தாங்க. நானும், அவரும் அங்கேயே தேர்வானோம். இருவருமே கருமாத்தூர் தான். எழுதிக் கொடுத்ததை பேச சொன்னாங்க, ஒரு வருடம் பருத்திவீரன் படக்குழுவில் தான் இருந்தேன். பள்ளிக்கு போவது குறைந்துவிட்டது . படப்பிடிப்பின் போது, எனக்கு எதுவும் தெரியவில்லை. சின்ன சின்னதா எடுப்பாங்க. அப்போ என்ன எடுக்குறாங்கன்னே தெரியாது. முழுசா முடிஞ்சு படம் வந்த பிறகு தான், பார்க்கும் போது சந்தோசமாக இருந்தது. 2008ல் பருத்திவீரன் வந்த பிறகு, அதுக்கு அப்புறம் ஆடு, மாடு வளர்க்க ஆசை வந்துடுச்சு. நான் ஆடு மேய்க்க போய்விடுவோனோ என என் தந்தைக்கு பயம்; என்னை திட்டினார். என்ன வேலை பார்த்தாலும், இதை விட்டுவிடக்கூடாது என நான் நினைத்தேன். இதற்காகவே என்னுடன் என் தந்தை 2 ஆண்டுகள் பேசவில்லை. இறக்கும் போதும் அவர் என்னிடம் பேசவில்லை. அதை நெனச்சா இப்பவும் வருத்தமா இருக்கும்.
பருத்துவீரன் படம் வருவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன், கண்ணில் குச்சி குத்துவிட்டது. அதில் தான் எனது கண் பாதிக்கப்பட்டது. அறியாத வயதில் நடிப்புக்கு வந்துவிட்டேன். அப்போது எனக்கு அந்த அருமை தெரியவில்லை. இப்போ, சினிமானா என்னென்னு தெரியுது. இப்போ எனக்கு நடிக்க ஆசையிருக்கு; ஆனால் வாய்ப்பு இல்லை. இப்போ எனக்கு மாடு வளர்க்குறது தான் ஒரே ஆசை. அது தான் வாழ்க்கைனு ஆயிடுச்சு.
திருமணம் ஆகிவிட்டது. மாட்டுக்கு இரை போடுவதற்காக தான் இந்த வேலைக்கே வருகிறேன். பழநிக்கு பாதயாத்திரை சென்ற போது, 15 பேர் என்னை வழிமறித்தார்கள். அவர்கள் என்னை அடையாளம் கண்டுவிட்டார்கள். அதன் பின் என்னுடன் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். அது தான் எனக்கு வாழ்நாளில் சந்தோஷமான தருணம். எனக்கு கிடைத்த ஒரே ஒரு அங்கீகாரம் அது மட்டும் தான். யாரிடம் போய் சினிமா வாய்ப்பு கேக்குறதுன்னு கூட தெரியல. அதுக்கு முயற்சியும் பண்ணல. 5 வருசமா லோடு மேனா போய்ட்டு இருக்கேன்’’ என்றார்.
குட்டிப்பையன் இப்போ பெரிய இளைஞராக வளர்ந்து நிற்கிறார். ஆனால், குட்டிப்பையனா இருந்த போது கிடைத்த வளர்ச்சி, இப்போது இல்லை என்பது தான் வருத்தமான விசயம். பருத்துவீரன் இப்போது வருத்த வீரனாக இருந்தாலும், வீரன் வீரனே!