Karthi 29: கார்த்தி படத்திற்காக பிரம்மாண்ட செட்.. டாணாக்காரன் பட இயக்குநர் செம ஹேப்பி
சர்தார் 2, வா வாத்தியார் படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் அவரது கெட்டப்பும் பிரம்மாண்ட செட்டும் கோலிவுட்டையே அதிர வைத்திருக்கிறது.

மெய்யழகன் படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி கங்குவா, ஹிட் தேர்ட் கேஸ் போன்ற படங்களில் கேமியோ ரோலில் தோன்றினார். ஹிட் 4 படத்தின் கதையிலும் நேரடி தெலுங்கு படத்தில் ஹீரோவாகவும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் சர்தார் 2, வா வாத்தியார் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சர்தார் 2 படத்தின் டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. முதல் பாகத்தில் தண்ணீர் திருட்டு சம்பவத்தை மையப்படுத்தி உருவான கதையில் ஊழல் மிகப்பெரிய பிரச்னை என்பதை பேசியிருந்தார் இயக்குநர் மித்ரன்.
டிஜிட்டல் முறையில் ஊழல்
சர்தார் 2 படத்திலும் சர்வதேச பிரச்னையை பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில், தண்ணீரையும் தாண்டி சீனா நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இருக்கும் மைய பிரச்னையை கதையாகக் கொண்டு உருவாகி வருவதாக தெரிகிறது. இயக்குநர் மித்ரன் இயக்கும் படங்களில் டிஜிட்டல் முறையில் அப்பாவி மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை கமர்ஷியல் கதைக்களத்தோடு தனது பாணியில் சொல்லி வருகிறார். இரண்டாவது முறையாக மித்ரன் - கார்த்தி கூட்டணி வெற்றிப்படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்ட இருக்கிறார். திரை ரசிகர்களும் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
ராமேஸ்வரத்தில் புதிய படம்
அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருக்கும் கார்த்தி தற்போது டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் தமிழ் அசுரன், விடுதலை 2, ரெட்ரோ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர், இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநரும் கூட. விதவிதமான போலீஸ் கதைகளை பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு டாணாக்காரன் திரைப்படம் வேறு விதமான பரேட் நிகழ்ச்சி மூலம் பாடம் நடத்தினார் தமிழ். கொரோனா காலகட்டத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து தனது இரண்டாவது படத்தை தமிழ் இயக்க இருக்கிறார். இப்படம் ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மீனவ கிராமம்
இப்படத்திற்காக ராமேஸ்வரத்தில் தனியாக மீனவ கிராமம் ஒன்றை படக்குழு செட் அமைத்து வருகிறதாம். கார்த்தி நடித்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமான கதைக்களம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ராமேஸ்வரம் கடலிலும் கதை நகர்வதாக தெரிகிறது. டாணாக்காரன் படத்தை போன்று இப்படமும் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகிறது. டாணாக்காரன் ரிலீஸ் ஆன நேரத்தில் இயக்குநர் தமிழிடம் கதை கேட்டு ஓகே செய்த கார்த்தி இப்படத்தில் முழுமையாக தனது கெட்டப்பை மாத்தி மீனவனாக நடிக்க இருக்கிறார். மேலும் இப்படம் குறித்த முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















