HBD Kanaga : இந்த மான் எந்தன் சொந்த மான்... வாடாத கிராமத்து ரோஜா கனகா பிறந்தநாள் இன்று
வாரிசு நடிகர்கள் பலரை தமிழ் சினிமா கண்டு இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே நட்சத்திரங்களாக ஜொலித்தனர். அதில் ஒரு ஸ்டார் நடிகை தான் கனகா.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் நடிகைகள் வருவது என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒன்றுதான். அப்படி ஏராளமான நட்சத்திரங்களின் வாரிசுகள் தலைமுறைகளாக சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். ஆனால் அப்படி இரண்டாவது தலைமுறையை சேர்ந்த பலர் நடிப்புத்துறையில் நுழைந்தாலும் அதில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள். அந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரு ஸ்டார் நடிகை தான் கனகா. இந்த கிராமத்து ரோஜாவின் 50வது பிறந்தநாள் இன்று.
பழம்பெரும் நடிகைகளில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் மற்றும் அந்த காலகட்டத்தில் நடித்த பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். அவரின் மகள் கனகா, 1989ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான 'கரகாட்டக்காரன்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அப்படத்துக்கு பெரும் பலம் சேர்த்தது இளையராஜாவின் இசையில் அழகான கிராமிய பின்னணியில் அமைந்த பாடல்கள் தான் என்றால் அது மிகையல்ல. அந்த பாடல்களுக்கு மேலும் அழகு சேர்த்தவர் கனகா. கிராமத்து பெண்களுக்கே உரித்தான துணிச்சலும், தைரியத்தையும் அழகாக பிரதிபலித்து இருப்பார் கனகா. அன்றும் இன்றும் என்றும் ஒரு ஆல் டைம் பேவரட் கரகாட்டக்காரன் காமாட்சியாக நினைவுகளில் இருப்பவர் கனகா. ராமராஜன் - கனகா காம்போ ஒரு சூப்பர் ஹிட் கூட்டணியாக அமைந்தது.
கனகா திரைப்பயணத்தில் கரகாட்டக்காரன் படத்துக்கு பிறகு ஒரு கமர்சியல் ஹிட் கொடுத்த படம் 'கோயில் காளை'. கங்கை அமரன் இயக்கத்தில், விஜயகாந்த் ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தின் பாடல்களும் அந்த காலத்து இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாடல்களாக அமைந்தன.
இயக்குநர் பாசில் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி ஜோடியாக 'கிளி பேச்சு கேக்குதம்மா' படத்தில் நகைச்சுவை கலந்த வெகுளித்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபு ஜோடியாக 'கும்பக்கரை தங்கையா', தாலாட்டு கேக்குதம்மா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சிவாஜி கணேசன் - தேவிகா காம்போவில் பல வெற்றி படங்களை கண்ட இந்த தமிழ் சினிமா அவர்களின் வாரிசுகளான பிரபு - கனகா காம்போவையும் ரசித்தது. முதலாளியம்மா படத்தில் லீட் ரோலில் பெண்களை மையப்படுத்தி வந்த திரைப்படத்திலும் வெகு சிறப்பாக நடித்திருந்தர். இப்படிப் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய கனகா மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
திரைவாழ்க்கையில் ஒரு வெற்றி நாயகியாக இருந்த கனகாவின் தனிப்பட்ட வாழ்க்கை அந்த அளவுக்கு வெற்றிகரமாக அமையவில்லை.