Kanguva: சூடுபிடிக்கும் சூர்யாவின் கங்குவா... சென்னையில் அடுத்தகட்ட ஷூட்டிங்.. விறு விறு அப்டேட்..
ஜூன் 20ஆம் தேதி சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும், குறுகிய கால ஷூட்டிங்காக இது இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்சியல் இயக்குநராக உருவெடுத்துள்ள சிறுத்தை சிவா இயக்கத்தில், யூவி கிரியேஷன்ஸ் - ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் திரைப்படம் ‘கங்குவா’.
சென்னையில் கங்குவா
சூர்யாவின் 42ஆவது படமான கங்குவா ஃபேண்டஸி கதையாகத் தயாராகி வரும் நிலையில், இப்படத்தில் 13 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திஷா பதானி இப்படத்தில் நடித்து வரும் நிலையில், நடிகை மிருணாள் தாக்கூரும் இப்படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக படத்தின் ஷூட்டிங் கோவா,பிஜூ தீவுகள், எண்ணூர் துறைமுகம், கேரளா, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கங்குவா படத்தின் ஷூட்டிங் அடுத்ததாக சென்னையில் தொடங்க உள்ளது. வரும் 20ஆம் தேதி சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும், குறுகிய கால ஷூட்டிங்காக இது இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட செட்
மேலும், வரலாற்றுப் பகுதி காட்சிகளுக்காக பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும், விஎஃபெக்ஸ் பணிகள் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ப்ரோமோ இந்த மாதம் வெளியாகும் என ஏற்கெனவே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.
இந்நிலையில் படத்தின் ப்ரோமோவை எதிர்பார்த்து சூர்யா ரசிகர்கள் காத்துள்ளனர். முன்னதாக சூர்யா - சிறுத்தை சிவாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், ஜிம்மில் சூர்யா ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சிங்கம் பட சீரிஸூக்குப் பிறகு கங்குவா படத்தில் சூர்யாவுடன் இணைந்துள்ளார். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
சூர்யா இப்படத்துக்காக உடல் எடையைக்கூட்டி மாஸாக வலம் வரும் நிலையில், அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்க்கு இப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறை ஸ்பெஷலாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவின் முகத்தையே காட்டாமல் இப்போது வரை படக்குழு சஸ்பென்ஸ் கடைபிடித்து வரும் நிலையில், இனையத்தில் சூர்யாவின் முகத்துடன் AI வடிவமைத்த கங்குவா கெட் அப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சூர்யா ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களுக்கு இதயங்களை வழங்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.