Kangana Ranaut Chandramukhi 2: தன்னடக்கமான ஹீரோயின்...புகழ்ந்து தள்ளிய பி.வாசு.. கண்கலங்கி விடைபெற்ற கங்கனா!
“நாங்கள் உங்களை மிஸ் செய்வோம் கங்கனா” என எழுதப்பட்ட கேக் உடன் இந்த வீடியோவில் இயக்குநர் பி.வாசுவும், படக்குழுவினரும் இடம்பெற்றுள்ளனர்.
சந்திரமுகி 2 படக்குழுவிடமிருந்து நடிகை கங்கனா விடைபெறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2005ஆம் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் 700 நாட்களுக்கும் மேல் தியேட்டர்களில் ஓடி பெரும் சாதனை படைத்தது.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க பி.வாசு சந்திரமுகி 2 படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 14ஆம் தேதி வெளியான நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் பாகத்துக்கு வித்யாசாகர் இசையமைக்க, இரண்டாம் பாகத்துக்கு மரகதமணி இசையமைக்கிறார்.
ராதிகா சரத்குமார், கங்கனா ரனாவத், வடிவேலு, லட்சுமி சுரேஷ் மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, மஹிமா நம்பியார் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளனர். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, தோட்டா தரணி கலை இயக்கம் செய்கிறார்.
முன்னதாக இப்படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சந்திரமுகி 2 படப்பிடிப்பில் தன் தொடர்பான காட்சிகள் ஷூட்டிங் நிறைவடைந்ததாக முன்னதாக கங்கனா ட்வீட் செய்துள்ளார்.
“ஒரு திரைப்படக் குழுவுடன் ஒன்றாக இணைந்து சண்டையிட்டு, நடித்து, பயணம் மேற்கொண்டு பல உயர்வு தாழ்வுகளை சந்திக்கிறோம். படப்பிடிப்பில் பல அற்புதமான மனிதர்களைச் சந்திப்பதால், அவர்கள் குடும்பம், நண்பர்களை விட மேலானவர்கள் ஆகிவிடுகிறார்கள்.
திடீரென்று இந்தப் பயணம் முடிவடையும்போது, அதை எளிதாக விட்டுவிட முடியவில்லை. சந்திரமுகி2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து விடைபெறும்போது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என நெகிழ்ச்சியுடன் கங்கனா ட்வீட் செய்துள்ளார்.
தாம் தூம், தலைவி பட்ங்களுக்குப் பிறகு ஒரு நேரடி தமிழ் படத்தில் கங்கனா தற்போது நடித்துள்ள நிலையில், சந்திரமுகி 1 படத்தில் இடம்பெற்ற ரா ரா... பாடலைப் போன்று இந்தப் படத்திலும் ஒரு பாடல் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தலைவி படத்துக்காக ஏற்கெனவே நடன இயக்குநர் காயத்ரி ரகுராமிடம் கங்கனா பரத நாட்டியம் கற்ற நிலையில், இந்தப் படத்திலும் பரத நாட்டியமாடி கங்கனா ரசிகர்களை ஈர்ப்பா என எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கனா தன் ட்வீட் உடன் வீடியோவும் பகிர்ந்துள்ள நிலையில், “நாங்கள் உங்களை மிஸ் செய்வோம் கங்கனா” என எழுதப்பட்ட கேக் உடன் இந்த வீடியோவில் இயக்குநர் பி.வாசுவும், படக்குழுவினரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் நீங்கள் மிகவும் தன்னடக்கம் உள்ள அற்புதமான ஹீரோயின் என பி.வாசு கங்கனாவைக் குறிப்பிடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும், ”லாரன்ஸ் மாஸ்டர் என்று பிரபலமாக அறியப்படும் ராகவா லாரன்ஸ் ஒரு நடன இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் இன்று அவர் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்பட தயாரிப்பாளர் / சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, நம்பமுடியாத உயிரோட்டமுள்ள, கனிவான, அற்புதமான மனிதர். உங்கள் கருணை, அற்புதமான நகைச்சுவை உணர்வு, அற்புதமான பிறந்தநாள் பரிசுகளுக்கும் நன்றி. உங்களுடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சி” என நடிகர் லாரன்ஸைப் புகழ்ந்தும் கங்கனா பதிவிட்டுள்ளார்.
கங்கனாவின் இந்தப் பதிவுகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.