இந்தியன் 3 பஞ்சாயத்து முடிந்தது....ரஜினி சொன்னதும் தட்டாமல் செய்த கமல்ஹாசன்
பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ஷங்கர் மற்றும் கமல் சம்பளமே வாங்காமல் இந்தியன் 3 படத்தின் எஞ்சிய பகுதிகளை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்தியன் 3
கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களால் மிக மோசமாக விமர்சிக்கப்பட்ட படங்களில் ஒன்று இந்தியன் 2. இதனால் அடுத்தபடியாக வெளியாக இருந்த இந்தியன் 3 படத்தை வெளியிடுவதில் பல சிக்கல்களை படக்குழு சந்தித்து வருகிறது. தற்போது இந்தியன் 2 படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பை முடித்து படத்தை வெளியிட இயக்குநர் , ஷங்கர் மற்றும் கமல் தயாரிப்பு நிறுவனம் லைகாவுடன் பேசி முடிவெடுத்துள்ளார்கள்.
சொதப்பிய இந்தியன் 2
1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் கிளாசிக் படமாக கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இந்தியன் 2 உருவாகியது. கொரோணா , படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என பல பிரச்சனைகளை எதிர்கொண்டு பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படத்தை இயக்கினார் ஷங்கர். ஆனால் ரசிகர்களை இந்த படம் சுத்தமாக கவரவில்லை. படத்தின் பல காட்சிகளை கிரிஞ்ச் என ரசிகர்கள் ட்ரோல் செய்யத் தொடங்கினார்கள்.
நிலுவையில் நின்ற இந்தியன் 3
இந்தியன் 2 படத்துடன் சேர்த்து இந்தியன் 3 படத்திற்கான படப்பிடிப்பையும் ஷங்கர் ஓரளவிற்கு முடித்துவிட்டார். இந்தியன் 2 படம் பிடிக்கவில்லை என்றாலும் இந்த படத்தின் இறுதியில் வந்த இந்தியன் 3 க்ளிம்ப்ஸ் நிறைய ரசிகர்களை கவர்ந்தது. கமல்ஹாசனும் தனக்கு இந்தியன் 2 விட இந்தியன் 3 தான் ரொம்ப பிடித்திருப்பதாக கூறியிருந்தார். ஆனால் இந்தியன் 2 படத்தின் தோல்வியைத் தொடர்ந்து இந்தியன் 3 படத்திற்கு மேற்கொண்டு பணம் முதலீடு செய்ய லைகா நிறுவனம் தயக்கம் காட்டியது. எஞ்சியுள்ள படப்பிடிப்பை முடிப்பதற்கும் , ஷங்கர் மற்றும் கமலின் சம்பளத்திற்கு லைகா பணம் தர மறுத்ததால் மீதி படப்பிடிப்பு நிலுவையில் நின்றது. இதனிடையில் இந்தியன் 3 நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் பரவின.
பேச்சுவார்த்தை நடத்திய ரஜினிகாந்த்
இப்படியான நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தயாரிப்பு நிறுவன மற்றும் படக்குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி கமல் மற்றும் ஷங்கர் சம்பளம் வாங்காமல் எஞ்சியுள்ள படப்பிடிப்பை முடித்துவிட்டு படத்தை வெளியிட இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒருவேளை படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று படம் வசூல் ஈட்டினால் லாபத்தில் அவர்களுக்கு ஷேர் தரப்படலாம் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்தியன் 2 தொடர்ந்து ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படமும் தோல்வியை தழுவியது. இப்படியான் சூழலில் இந்தியன் 3 படத்தின் வெற்றியடை ஷங்கர் பெரிதும் நம்பியிருக்கிறார். ஷங்கர் மட்டுமில்லை அவரது ரசிகர்களும் இந்த படம் வெற்றிபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.





















