(Source: ECI/ABP News/ABP Majha)
23 years of Hey Ram: காலத்தை வென்ற கலைஞனின் பொக்கிஷம்.. தமிழ் சினிமா கண்ட வரலாறு.. 23 ஆண்டுகளை கடந்த ஹேராம்..!
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, காந்தி படுகொலை உள்ளிட்டவையை கதைக்களமாக கொண்டு அமைந்த 'ஹே ராம்' திரைப்படம் இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர் நடிகர் கமல்ஹாசன். நடிப்பு, கலை, அரசியல் என அனைத்தை பற்றிய நுண்ணறிவு படைத்த கலைஞன். தனது திரைப்படங்கள் மூலம் நுட்பமாக அதை மக்களுக்கு சென்றடைய செய்வதில் கமல்ஹாசனுக்கு நிகர் அவர் மட்டுமே.
சிறந்த உதாரணம் :
அந்த வகையில் 2000ம் ஆண்டு இதே நாளில் அவரே எழுதி, இயக்கி, நடித்து வெளியான திரைப்படம் 'ஹே ராம்'. இந்தி, தமிழ் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இப்படம் மக்களின் வரவேற்பை பெற தவறி இருந்தாலும் விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்தது. அவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் காலங்களால் முன்கூட்டியே எடுக்கப்பட்டவைகளாக இருக்கும். அதற்கு சிறந்த உதாரணமாக விளங்கிய திரைப்படம் ஹே ராம். இப்படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, காந்தி படுகொலை உள்ளிட்டவையை கதைக்களமாக கொண்டு அமைந்த திரைப்படம்.
மதவெறியராக மாறும் சாகோத் ராம்:
சாகோத் ராம் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும் அவரின் நண்பன் அம்ஜத் அலி கான் கதாபாத்திரத்தில் ஷாருக்கானும் நடித்திருந்தனர். பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிய வேண்டும் என விரும்பும் மக்கள் ஒருபுறம், பயங்கரமான கலவரம் ஒரு புறமும் பற்றி எரிய அதில் மனைவியை இழக்கும் சாகோத் ராம் கடும் கோபத்தில் துப்பாக்கியை கையில் ஏந்துகிறார். இதற்கு காரணம் காந்தி என தெரிய வர மூளை சலவை செய்யப்பட்டு காந்தியை கொல்லும் அசைன்மென்ட் சாகோத் ராம் கையில் வந்து சேருகிறது.
காந்தியின் நினைவு பரிசு :
கொலை செய்ய சென்ற இடத்தில் காந்தியின் அகிம்சா வழியில் ஈர்க்கப்பட்டு உண்மையை சொல்ல வரும் நேரத்தில் நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்படுகிறார் காந்தி. அவரின் நினைவாக காலணியையும், மூக்கு கண்ணாடியையும் எடுத்து வைத்துக் கொள்கிறார் சாகோத் ராம். காந்தியை கொலை செய்தது ஒரு வெளிநாட்டுக்காரன் என பெயரை வைத்து மட்டுமே சொல்லிவிட முடியாது ஆனால் அவன் ஒரு இஸ்லாமியர் அல்ல என்பதோடு படம் முடிவடைகிறது.
ரியல் ஹீரோ அம்ஜித் :
இப்படத்தில் நடிகர் கமல்ஹாஸன் சாகோத் ராம் எனும் Protagonist கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவரை விடமும் மேன்மையான குணங்கள் கொண்டது அம்ஜத் அலி தான். உறவினரின் மரணத்திற்கு சாகோத் தான் காரணம் என்பதை அறிந்தும் அதை காவல் துறையினரிடம் சொல்லாமல் உயிரிழக்கும் சமயத்திலும் அதே போல காந்தியின் உயிருக்கு பதிலாக எனது உயிரை எடுத்து கொள் என சாகோத்திடம் சொல்லும் நேரத்திலும் தனது குணத்தை நிரூபிப்பான். அம்ஜத் அலியின் உயிரை தியாகம் செய்த பிறகு தான் சாகோத்திடம் இருந்த மதவெறி ஒழிந்தது. காந்தியின் அஹிம்சா வழியை பின்பற்றி காந்தியின் கொள்கைகளை பின்பற்றும் அஜ்மத் அலி தான் படத்தின் உண்மையாக கதாநாயகன் எனலாம்.
ஹே ராம் திரைப்படம் வெளியான சமயத்தில் ஏராளமான அரசியல் சார்ந்த விமர்சனங்கள் எழுந்தன. ஒரு சிலரோ இப்படம் இந்துத்வாவின் ஆதரவு என்றும், சிலர் இல்லை என்று விவாதங்கள் செய்தது விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் பாடம் கற்றுக்கொடுத்த ஒரு முக்கியமான திரைப்படம்.