கமல் சாரை கேட்க திருப்பதி பிரதர்ஸூக்கு உரிமை இல்லை.. வைத்து செய்கிறார்கள்” - தயாரிப்பாளர் தேனப்பன் ஆதங்கம்!
Kamal Haasan: “கமல்ஹாசனிடம் திருப்பதி பிரதர்ஸ் கேள்வி எழுப்ப எந்த உரிமையும் இல்லை. அப்படி கேட்க வேண்டுமென்றால் ஞானவேல் ராஜா தான் கேட்க வேண்டும்” என தேனப்பன் கூறியுள்ளார்.
நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கும் போகுமிடம் வெகுதூரமில்லை படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மைக்கேல் கே.ராஜா இப்ப்டாத்தை இயக்கியுள்ளார். மெரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், தீபா சங்கர், கருணாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளரும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்தவருமான தேனப்பன் கலந்துகொண்டு பேசியதாவது:
‘சிம்புவை வைத்து படம் பண்ணுவது பெரிய விஷயம்'
இன்றைக்கு தமிழ் சினிமாவில் பெரிய பஞ்சாயத்தாக உத்தம வில்லன் பஞ்சாயத்தும் மைக்கேல் ராயப்பன் விவகாரமும் சென்று கொண்டிருக்கிறது. இந்த 2 ஹீரோக்களையுமே வைத்து நான் படம் செய்துள்ளேன். சிம்புவை வைத்து நான் வல்லவன் படம் செய்துள்ளேன். சிம்புவை வைத்து படம் பண்ணுவதே பெரிய விஷயம், நான் சிம்புவை இயக்குநராக வைத்து படமெடுத்துள்ளேன். அப்போ எனக்கு பேசுவதற்கான உரிமை நிறைய உண்டு. அதேபோல் கமல்ஹாசனை (Kamal Haasan) வைத்து உத்தமவில்லன் படத்தை திருப்பதி பிரதர்ஸ் எடுத்தார்கள். அந்தப் படத்தைப் பற்றி பேசுவதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கு என்றால், அந்த முறை கவுன்சிலில் நான் தான் செயலாளராக இருந்தேன்.
‘திருப்பதி பிரதர்ஸூக்கு உரிமை இல்லை’
அப்போது நடந்தது என்னவாகவோ இருக்கட்டும். அந்தப் பிரச்னையின் போது கமல் சார் லெட்டர் எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தது உண்மை. அந்தப் படம் வெளியாவதற்கு மெய்ன் நிதி ஈராஸ் கொடுத்தார்கள். இவர்கள் ஒரு பைசா தரவில்லை. அந்த நிதியை செட்டில் செய்தது ஞானவேல் ராஜா. அதனால் அடுத்த நாளே அந்த லெட்டர் உடன் படத்தின் உரிமையை ஞானவேல் ராஜாவுக்கு சரண்டர் செய்துவிட்டார்கள். அதனால் இவர்கள் (திருப்பதி பிரதர்ஸ்) கேள்வி எழுப்ப எந்த உரிமையும் இல்லை. அப்படி கேட்க வேண்டுமென்றால் ஞானவேல் ராஜா தான் கேட்க வேண்டும்.
‘கமல் சாருக்காக யாரும் பேசவில்லை...'
ஞானவேல் ராஜாவிடம் நான் தொடர்புகொண்டு கேட்டபோது தான் எப்போதும் கமல்ஹாசனுக்கு சப்போர்ட் தான் என்று சொன்னார். மதுரை அன்புசெழியனுக்கு இத்தனை பேர் சினிமா துறையில் கொதித்தெழுந்து நேர்காணல் தந்ததுபோல் கமல் சாருக்கு யாரும் பேசவில்லை என எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. நான் கமல் சாரிடம் ஜால்ரா அடிப்பதற்காகவோ, சான்ஸ் கேட்பதற்காகவோ சொல்லவில்லை. தாணு, திருப்பதி பிரதர்ஸ் எல்லாம் அவரை வைத்து ஒரு படம் தான் எடுத்துள்ளார்கள், ஆனால் நான் 3 படங்கள் எடுத்துள்ளேன். அதில் 2 படங்களில் நான் துணை தயாரிப்பாளராகவும், ராஜ் கமல் ஃபிலிம்ஸில் 19 படங்களிலும் பணியாற்றியுள்ளேன்.
‘கமல்ஹாசனை வைத்து செய்கிறார்கள்’
2015இல் மே மாதம் அவர் திருப்பதி பிரதர்ஸூக்கு தேதி தருவதாக சொன்னார். ஆனால் அவர்களால் பணம் தயார் செய்ய முடியவில்லை. இதுதான் உண்மை. அதற்கு பின் ஆகஸ்ட்டில் இவர்கள் தான் பணம் ரெடி செய்யவில்லை, வேறு யாருக்காவது கால்ஷீட் கொடுத்துவிடுங்கள் என ஃபோன் செய்து சொன்னார்கள். அப்போது முடிந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். ஒரு சினிமா ரசிகனாக நாயகன் கமல் சாரை எல்லாரும் வைத்து செய்வது சங்கடமா இருக்கு. நானும் வல்லவன் படமெடுத்தேன். நான் இதுவரை அவரிடம் எனக்கு படம் பண்ணிக் கொடுங்கள் எனக் கேட்டதில்லை. இதுவரை நான் யாருக்கும் 100 ரூபாய் கடன் வைத்ததில்லை. உங்களுக்கு சினிமா துறையில் யார் மீதும் குறை இருந்தால், இப்படி தகுதியுடன் பேசினால் அர்த்தம் உள்ளது. எல்லாருக்கும் செட்டில் செய்து விட்டு நீங்களும் பேசுங்கள்” எனக் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் ‘காதலா காதலா’ படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான தேனப்பன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.