ரஜினி - லோகேஷ் கூட்டணி எப்போது? விக்ரம் படக்குழுவினர் ரஜினிகாந்துடன் நேரில் சந்திப்பு!
விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக கமல், லோகேஷ் ஆகியோர் ரஜினியை சந்தித்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கமல் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ளனர். இந்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
விக்ரம் திரைப்படம்
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையடுத்து சிறப்பான பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு பிரம்மாண்டமான அளவில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு, பா ரஞ்சித் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முன்பதிவு துவக்கம்
கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்க, படத்தில் சூர்யா முக்கியமான கேமியோ ரோலில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, பகத் பாசில், ஆண்டனி வர்கீஸ், அர்ஜுன் தாஸ், நரேன் என நட்சத்திர பட்டாளமே படத்தில் காணப்படுகிறது. படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் படத்தின் புக்கிங்குகள் தற்போது துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகும் கமலின் இந்தப் படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் புக்கிங்குகள் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகளவில் புக்காகும் என்று கூறப்படுகிறது.
ப்ரோமோஷன்
படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. இந்நிலையில் டெல்லி, கேரளா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் கமல் உள்ளிட்டவர்கள் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு பேட்டிகளையும் அளித்து வருகின்றனர். பஞ்ச தந்திரம் கேங்கை வைத்து செய்திருந்த ப்ரமோஷன் வீடியோவும் பெரிதாக ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் ப்ரோமோஷன் பணிகளை மும்முரமாக பார்த்து வரும் படக்குழு ரஜினியை சந்தித்தது ஹாட் டாபிக் ஆகி உள்ளது.
Thank you @ikamalhaasan Sir! @rajinikanth Sir! What a friendship! inspiring Love you Sir's❤️❤️❤️ pic.twitter.com/l61EuttG89
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 29, 2022
ரஜினி சந்திப்பு
ப்ரோமோஷன் வேலைகளை பலமாக கவனித்து வரும் படக்குழுவினர் ரஜினியை சந்தித்து பூங்கொத்துகள் கொடுத்த புகைப்படங்களை லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார். வெளியிட்டு அதில் அவர் அதில் ரஜினிகாந்த்தையம் கமல்ஹாசனையும் டேக் செய்து நன்றி தெரிவித்துள்ளார். "என்ன ஒரு நட்பு, லவ் யு சார்ஸ்" என்று எழுதி உள்ளார். மதியம் 12 மணிக்கு போட்ட ட்வீட் 1 மணி நேரத்தில் 25 ஆயிரம் லைக்ஸை கடந்தது. 5 ஆயிரம் பேருக்கு மேல் ரீட்வீட் செய்துள்ளனர்.
ரஜினி - லோகேஷ் கூட்டணி?
தலைவர் 170 படத்தை இவர் தான் இயக்குவார், அவர் தான் இயக்குவார் என்று சிலரின் பெயர்கள் அடிப்பட்டது. முன்னதாக தனுஷ் இயக்க, ஐஸ்வர்யாவும், தங்கை சவுந்தர்யாவும் சேர்ந்து தயாரிப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டதால் அதற்கு வாய்ப்பு இருக்காது என்கிறார்கள். இந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் கூறியது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கமல் தயாரிப்பில், லோகேஷ் இயக்கத்தில் ரஜினியின் தலைவர் 169 படம் உருவாகும் என்று முன்பு கூறப்பட்டது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் தான் தலைவர் 169 பட வேலை துவங்கவில்லை. அந்த படம் எதிர்காலத்தில் வரும் என லோகேஷ் கூறினார். இந்நிலையில் விக்ரம் திரைப்பட ப்ரோமோஷனுக்காக கமலுடன் இணைந்து சந்தித்த புகைப்படம் வெளியானதும், கமென்டில் ரசிகர்கள் ரஜினி - லோகேஷ் படம் எப்போது என்று கேட்டு வருகின்றனர். இந்த சந்திப்புக்கு பிறகு, தலைவர் 170 படத்தை இயக்கும் அதிர்ஷ்டசாலி லோகேஷ் கனகராஜா என்று பேச்சு அதிகமாக கிளம்பியிருக்கிறது.