Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
Thug Life Box Office Day 1: கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Thug Life Box Office Day 1: மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
தக் லைஃப் திரைப்படம்:
நாயகன் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, 37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கர்நாடகவை தவிர்த்து உலகம் முழுவதும் இந்த திரைப்படம் நேற்று வெளியானது. ஆனால், வெளிநாடுகளில் முதல் காட்சி நிறைவடைந்தது முதலே, படத்திற்கு மோசமான விமர்சனங்களே குவிந்து வருகின்றன. ரொம்ப பழைய கதைஐ மையப்படுத்தி ஏற்கனவே பலமுறை அரைத்து துவைத்த திரைக்கதையை மணிரத்னம் இயக்கியுள்ளதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து அறியலாம்.
தக் லைஃப் முதல் நாள் வசூல்:
மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான திரைப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி மற்றும் நாசர் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் முதல் நாள் முடிவில் இந்தியா முழுவதும் மொத்தம் சுமார் 17 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக, சாக்னிக் இணையதள தரவுகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில், 25.6 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை குட் பேட் அக்லி 25.5 கோடி ரூபாயுடன் தக்கவைத்துள்ளது. அடுத்த இடத்தில் விடாமுயற்சி திரைப்படம் ரூ.25.5 கோடி வசூலித்துள்ளது.
தக் லைஃப் சர்வதேச வசூல்:
சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக தக் லைஃப் திரைப்படம் 30 கோடி ரூபாய் வரையில் வசூலித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இல்லாவிட்டாலும், கமல் - மணி ரத்னம் - சிம்பு கூட்டணி மீது நிலவிய எதிர்பார்ப்பால், முன்பதிவுகளில் டிக்கெட் அதிகளவில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. அதன்படி, சர்வதேச அளவில் மட்டும் சுமார் 15 கோடிக்கும் அதிகமாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு, ஒட்டுமொத்தமாக முதல் நாளில் 32 கோடி ரூபாயை தக் லைஃப் திரைப்படம் வசூலித்து இருக்கும் என திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கதை என்ன?
ஜில்லா படத்தின் கதையை சற்றே உல்டா புல்டா செய்து தக் லைஃப் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கமலை தவிர வேறு எந்தவொரு கதாபாத்திரமும் வலுவாக எழுதப்பட்வைல்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. கொடுக்கப்பட்ட வேடத்தில் சிம்பு, த்ரிஷா மற்றும் அபிராமி ஆகியோர் சிறப்பாக செய்துள்ளதாகவும், ஏ.ஆர். ரஹ்மான் இசை படத்திற்கு பெரும் வலு சேர்ப்பதாகவும் படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்கில் குறிப்பிட்டு வருகின்றனர்.




















