Kalaignar 100 LIVE: நவீன திரைப்படம் நகரம் - கலைஞர் 100 விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Kalaignar 100 Function LIVE Updates: கலைஞரைப் போற்றும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், 22.500 இருக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

Background
தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தினர் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் கலைஞர் 100 (Kalaignar 100) விழா இன்று மாலை 4 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தொடங்கி பிரமாண்டமாக நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3ஆம் தேதி தொடங்கி 2024 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வரை திமுக சார்பில் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகம் சார்பிலும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா வளர்ச்சியில் கலைஞர் மு.கருணாநிதி ஆற்றிய மிகப்பெரிய பங்களிப்பை போற்றும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டத்தில் “கலைஞர் 100” விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து தமிழ்நாடு அரசிடம் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் எதிர்பாராதவிதமாக சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த நிலையில், கலைஞர் 100 விழா ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என மறுதேதி அறிவிக்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரும், முன்னாள் நடிகர் சங்கத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச. 28ஆம் தேதி உயிரிழந்த நிலையில், கலைஞர்100 விழா மீண்டும் தள்ளிப்போகுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இன்று கலைஞர் 100 விழா மாலை 4 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் இந்த விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கலைஞரைப் போற்றும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், 22.500 இருக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மாலை 4 மணிக்குத் தொடங்கி 6 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக ரஜினி, கமல், விஜய் தொடங்கி, பிற மொழி உச்ச நட்சத்திரங்களான சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி ஆகியோருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற விழா ஒன்றில் நடிகர் விஜய், கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை அவருடன் கொண்டாடி மேடையினை அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், அவருக்கு ஒரு சிலை அமைக்க வேண்டும் எனவும் பேசியது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் இவ்வாறு பேசும்போது மேடையில் நடிகர்கள் அஜித் மற்றும் சூர்யா ஆகியோர் உள்ளனர்.
Kalaignar 100 LIVE: நவீன திரைப்படம் நகரம் - கலைஞர் 100 விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
கலைஞர் 100 விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘பூந்தமல்லியில் ரூ.540 கோடி செலவில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது’ என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ரூ.25 கோடி மதிப்பில் 4 படப்பிடிப்பு தளங்களுடன் எம்ஜிஆர் திரைப்பட நகரம், புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ள அனைத்து வசதிகள், 5 ஸ்டார் ஹோட்டல் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Kalaignar 100 LIVE: ஜெயகாந்தனின் மருத்துவ செலவை ஏற்றவர் கலைஞர் - ரஜினிகாந்த்
எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருத்துவ செலவை ஏற்றவர் கலைஞர் கருணாநிதி என கலைஞர் 100 விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.





















