Kaathu Vaakula Rendu Kadhal: வளையோசை கலகலவென.. ஆனா ரெண்டு நாயகியா? காத்து வாக்குல படத்தின் ஷூட்டிங் வீடியோ!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்து வரும் படத்தில் ஷூட்டிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. கதாநாயகன் பாத்திரம் மட்டுமின்றி பல வில்லன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய் சேதுபதி தற்போது “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேருந்தின் படிக்கட்டில் நிற்க, அவருக்கு முன்னால் நயன்தாராவும், நயன்தாராவிற்கு முன்னால் சமந்தாவும் நிற்பது போல காட்சி படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியானது கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சத்யா திரைப்படத்தில் கமல்ஹாசனும், அமலாவும் “வலையோசை கலகலவென” என்ற படத்தின் பாடல் காட்சியின் மறு ஆக்கம் போன்றே இருந்தது.
இளையராஜா இசையில் வாலி எழுதிய பாடல் மாபெரும் வெற்றி பெற்ற பாடல். அந்த பாடல் காட்சியில் கமல்ஹாசன் அணிந்திருப்பது போன்றே டை கட்டிய சட்டை போன்றே விஜய் சேதுபதி இந்த காட்சியில் நடித்துள்ளார். மேலும், அந்த பாடல் காட்சியில் அமலா சேலையில் இருப்பது போலவே, நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா இருவரும் அதே நிற சேலையில் விஜய் சேதுபதிக்கு முன்னால் பேருந்தின் படிக்கட்டில் நிற்பது போன்று காட்சி படமாக்கப்பட்டது.
தற்போது, இந்த புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முழுக்க, முழுக்க பாண்டிச்சேரியில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஏற்கனவே நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். பாண்டிச்சேரியிலே படமாக்கப்பட்டிருந்த அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நயன்தாராவும், சமந்தாவும் முதன்முறையாக இந்த படம் மூலம் இணைந்து நடிக்கின்றனர்.
ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் கார்த்தி கண்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.