K. Rajan : சைந்தவி ஒழுக்கமான பொண்ணு: விவாகரத்து வரை வந்து நிக்குது - கே. ராஜன்
K.Rajan : திரையுலகில் இன்று பெருகி வரும் விவாகரத்தை, இன்றைய இளைஞர்கள் பின்பற்றினால், தமிழ் பண்பாடு கெட்டுப்போகும் - கே. ராஜன்
'மாயோன்' சிவா இயக்கத்தில் அஷ்வினி சந்திரசேகர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கன்னி'. மணிமாறன், தாரா கிரீஸ், ராம், பரதன் மற்றும் ஏராளமான புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் கே. ராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அந்த வகையில் தயாரிப்பாளர் கே. ராஜன் இன்று திரைப்பட பிரபலங்கள் பலரும் திருமண முறிவு செய்து கொள்வது குறித்து மனவேதனை அடைந்ததாக தெடிவித்து இருந்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில் "தமிழ் பாரம்பரியம் கலாச்சாரம் என்றால் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வது. அந்த வகையில் தமிழ் சினிமா உலகத்தை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு சிறப்பான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம் பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதி. காதலித்து திருமணம் செய்து கொண்டு இன்று வரை இன்பமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
இன்றைய இளைஞர்கள் சினிமாவில் ஹீரோ என்ன செய்தாலும் அதை அவர்களும் பின்பற்றுகிறார்கள். அவர்களின் ஸ்டைல், ட்ரெஸ்ஸிங் பார்த்து எப்படி ரசிகர்கள் செய்து கொள்கிறார்களோ, அதே போல நடிகர்களின் வாழ்க்கையை பார்த்து அவர்களை பின்பற்ற துவங்கினால் தமிழரின் பண்பாடு கலாச்சாரத்தின் நிலை மோசமாக போகும்.
கடந்த மாதம் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மிகவும் மன வேதனைப்பட்டனர். சிங்க குட்டிகள் போல இருக்கும் குழந்தைகளை பற்றி அவர்கள் யோசிக்கவில்லை. விவாகரத்து வேண்டும் என பிரிந்தனர்.
தற்போது ஜி.வி. பிரகாஷ் குமார் - சைந்தவி விவாகரத்து என வந்து நிற்கிறார்கள். என்னுடைய 'உணர்ச்சிகள்' படத்தில் தான் முதல் பாடலை சைந்தவி பாடினார். ரொம்ப நல்ல அடக்கமான ஒழுக்கமான பொண்ணு. காதலிக்கும்போது இரண்டு பேரும் நன்றாக மனதை புரிந்துகொண்டு தான் லவ் பண்றாங்க. கல்யாணம் செய்துகொண்ட பிறகு ஏன் இருவருக்கும் இடையே கசப்புணர்ச்சி வருகிறது. விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர்கள் கெட்டு போவதில்லை.
தற்போது ஐடி கம்பெனிகளில் எல்லாம் 15 நாட்களில் காதல் ஒரு மாதத்தில் திருமண வாழ்க்கை மூன்றே மாதத்தில் விவாகரத்து என வந்து நிற்கிறார்கள். இன்று நீதிமன்றம் முழுக்க விவாகரத்து வழக்குகள் நிரம்பி வழிகின்றன. இது போன்ற ஒரு பண்பாடு வளர சினிமா காரணமாக மாறிவிடக்கூடாது என்பதுதான் என் வேதனை என்று பேசியுள்ளார்.
நடிகர் நடிகைகளை பார்த்து இன்றைய சமூகத்தினர் இது போன்ற ஒரு கலாச்சாரத்தை வளர்த்துவிடகூடாது. தயவு செய்து கணவன் மனைவியாக சேர்ந்து இன்பமான வாழ்க்கையை வாழுங்கள்!” என பேசி இருந்தார் தயாரிப்பாளர் கே. ராஜன்.