ஜீவா நடித்துள்ள 'தலைவர் தம்பி தலைமையில் ' படத்தின் இசை வெளியீட்டு விழா
ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, இணை தயாரிப்பாளர் தீபக் ரவி தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட படக்குழுவினர் படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள்
தலைவர் தம்பி தலைமையில் இசை வெளியீடு
*நடிகர் ஜெய்வந்த் பேசுகையில்
'' டி டி டி ( TTT) என்றால் தி டைம் ஃபார் டிவிஸ்ட் என சொல்லலாம். ஜனவரி 30 வெளியீடு என்று சொல்லிவிட்டு, 15ஆம் தேதியே வெளிவருவது மிக்க மகிழ்ச்சி. எந்த ஒரு கலைஞனுக்கும் தான் நடித்த படம் பண்டிகை தினங்களில் வெளியானால் அது மகிழ்ச்சியை தரும். அந்த வகையில் இந்த 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என சொல்வார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் படம் மிகவும் கேளிக்கையான படம். ஃபீல் குட் படம் என்றும் சொல்லலாம். 45 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பு தருணம் முழுவதும் அனைவரும் குடும்பமாக மகிழ்ச்சியாக பணியாற்றினோம். படப்பிடிப்பு தளத்தை நடிகர் ஜீவா எப்போதும் உற்சாகமாகவே வைத்துக் கொண்டிருப்பார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டிற்கான முதல் ஃபேமிலி என்டர்டெய்னர் படம் இது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
நடிகை பிரார்த்தனா நாதன் பேசுகையில்
'' தலைவர் தம்பி தலைமையில் எனும் இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. 2025 என்றால் எனக்கு இந்த படத்தின் நினைவுகள் தான் அதிகம். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகில் ஒரு அருமையான இடத்தில் நாங்கள் அனைவரும் தங்கி இருந்தோம். 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. நிறைவடைந்த தருணத்தில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்து பிரிகிறோமே ..! என்ற கவலை தான் அதிகம் ஏற்பட்டது. அந்த அளவிற்கு அனைவரும் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து சந்தோஷமாக பணியாற்றினோம். இந்தப் படத்தில் நான் சௌமியா எனும் கதாபாத்திரத்தில் மணப்பெண்ணாக நடித்திருக்கிறேன். என்னுடைய திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் உணர்வு பூர்வமான மற்றும் அனைத்து விதமான உணர்வுகளையும் சார்ந்தது தான் இந்த திரைப்படம். இதுபோன்ற அழுத்தமான வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நடிகர் தம்பி ராமையா பேசுகையில்
'' இந்த ஆண்டின் கிளீன் 'யு' சர்டிபிகேட் உடன் திரையரங்கத்திற்கு குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்து ரசிக்கும் வகையிலான தகுதி படைத்த படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' படம் அமைந்திருக்கிறது. அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
கடந்த ஒரு சில ஆண்டுகளாக நான் எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டுகளில் நடித்து சிறிதளவு நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறேன். அதை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.
இப்படத்தின் இயக்குநர் நிதிஷ் கதையை விவரிக்கும் போதே அதில் நடிக்க வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது. உயிர்ப்புள்ள கதை தனக்குத் தேவையானதை தானே தேடிக் கொள்ளும் என்பதைப் போல இந்த படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் ஃபாசிலுக்கு பிறகு... இயக்குநர் சித்திக் -லாலுக்கு பிறகு.. இயக்குநர் நிதிஷ் ஒரு பீல் குட் ஃபேமிலி என்டர்டைனரை வழங்கி இருக்கிறார். அவருடைய முதல் தமிழ் படத்தில் நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி.
இந்த படத்தின் ஜட்ஜ்மெண்டை நடிகர் ஜீவா தீர்மானிக்கிறார். இயக்குநர் நிதிஷ் ஜீவாவை சந்தித்து கதையை சொல்லும் போது.. ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகன்... ஏராளமான வெற்றி படங்களை வழங்கிய நடிகர்.. ஆகிய அனுபவங்களை தனக்குள் வைத்துக் கொண்டு, இந்த கதைக்குள் தனக்கான பங்களிப்பு என்ன? என்பதை விட... தயாரிப்பாளரின் கோணத்தில் இருந்து இந்த படத்தின் கதையை முழுவதுமாக கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜீவா. வெற்றி பெறும் படத்தில் நான் கதாநாயகனாக இருக்கிறேன் என்று உறுதியாக தீர்மானித்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படித்தான் இந்த திரைப்படம் உருவானது அனைவருக்கும் திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கி அதில் தன்னுடைய இருப்பையும் நிலைநிறுத்திக் கொண்ட ஜீவாவை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த எண்ணம் அனைத்து ஹீரோக்களுக்கும் இருந்தால் ஓடாத படங்களின் எண்ணிக்கை குறைந்து, ஓடும் படங்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நாயகனாக ஜீவா வெற்றி பெறுவார்.
கல்யாணம் தொடர்பான காட்சிகள் எத்தனையோ படங்களில் இடம் பிடித்திருக்கும். இருந்தாலும் இதில் ஒரு புது வகையான திரைக்கதையில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் துபாயில் அமர்ந்து கொண்டு படத்தின் அனைத்து பணிகளையும் ஜீவாவிடம் ஒப்படைத்து விட்டார்.
இந்தப் படத்தின் காட்சிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் படமாக்கப்பட்டது. அதன் போது எனக்கு 'மைனா' திரைப்படம் தான் நினைவுக்கு வந்தது. நானும், பங்காளி இளவரசும் படம் நெடுக வரும் கதாபாத்திரத்தை அனுபவித்து ரசித்து நடித்திருக்கிறோம். ஜனவரி 15ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு யாரும் எந்த ஒரு சிறிய குறையையும் சொல்லிவிட முடியாது. இப்படி ஒரு திரைப்படம் வரவேண்டும் என அனைவரும் கொண்டாடுவார்கள்.
நகைச்சுவை நடிகர்களாக நடிப்பவர்கள் கதையின் நாயகர்களாக அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது நகைச்சுவை நடிப்பிற்கான வெற்றிடம் உருவாகிறது. அதனை நிரப்புவதற்காக பல்வேறு தளங்களில் பிரபலமாக இருக்கும் இவர்கள்...(மேடையில் இருக்கும் அறிமுக நடிகர்கள்) இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது'' என்றார்.





















