Jailer Opening Day Collection: 'தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா': காலியாகும் டிக்கெட்டுகள்.. கலெக்ஷனை அள்ள தயாராகும் ஜெயிலர்..!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் 4வது முறையாக நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், முதல் வசூல் நிலவரம் குறித்து கணிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பில் ஜெயிலர் படம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் 4வது முறையாக நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு, சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சரவணன், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இந்த படம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
பட்டையை கிளப்பிய ரஜினி
ஜெயிலர் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று பட்டையை கிளப்பியது. பாட்ஷா ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுக்கப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். கடந்த ஜூலை 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் 6 ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகி இன்னும் எதிர்பாப்பை எகிற வைத்துள்ளது.
டிக்கெட் முன்பதிவு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கிய நிலையில், முதல் 5 நாட்களுக்கான டிக்கெட்டுகள் கிட்டதட்ட அனைத்து இடங்களிலும் தீர்ந்து விடும் நிலையில் உள்ளது. தொடர் விடுமுறை வருவதால் முன்பதிவு செய்யும் வேலையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் நாள் வசூல் நிலவரம்
இந்நிலையில் தமிழ்நாட்டில் 'ஜெயிலர்' படம் முதல் நாளில் தோராயமாக ரூ.25 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காலை 9 மணிக்குதான் முதல் காட்சி தொடங்குவதால் குறைந்தது வசூல் 17-18 கோடியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல் உலகளவில் இப்படம் முதல் நாளில் கிட்டதட்ட ரூ.50 கோடிக்கும் மேலாக வசூல் செய்யலாம் என உறுதியாக நம்பப்படுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு காரணம் 6 வயது முதல் 60 வயது வரையிலான மக்கள் ரஜினிக்கு ரசிகர்களாக உள்ளனர். மேலும் ரஜினி வந்தாலே போதும், ஸ்டைல் பண்ணாலே போதும் என நினைப்பவர்கள் இன்றும் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலேயே ரஜினிக்கு தான் வெளிநாடுகளில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது பலரும் அறிந்த செய்தி. இதனால் ஜெயிலர் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இதுவரை ரிலீசான அத்தனை படங்களின் சாதனைகளையும் ஜெயிலர் படத்தின் டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கை முறியடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளதால் அவர்கள் சம்பந்தப்பட்ட திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.