Jailer:”புலிக்கே பசிய தூண்டிப்புட்ட, ரத்த காவு வாங்காம விடுமா” - அதிரடி காட்டும் ஜுஜுபி பாடல் வரிகள் இதுதான்
”புலிக்கே பசிய தூண்டிப்புட்ட, கரண்டுல கைய வச்சிப்புட்ட, காவு வாங்காம விடுமா” - ஜெயிலர் ஜுஜுபி பாடல்
ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் 3வது பாடலான ஜுஜுபி பாடலின் ’புலிக்கே பசிய தூண்டிப்புட்ட, அது ரத்தக்காவு வாங்காம தான் விடுமா’ வரிகள் பாடலில் அதிரடியை காட்டியுள்ளன.
நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியாவாக உருவாகும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க, அனிரூத் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமன்னாவின் அசத்தல் நடத்தில் வெளியான காவலா பாடலும், ரஜினியின் மாஸ் வசனத்தில் வெளியான ஹூக்கும் பாடலும் மாஸ் ஹிட்டாக இணையத்தில் டிரெண்டாகியது. அந்த வரிசையில் இன்று மாலை 6 மணியளவில் படத்தின் 3வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஜுஜுபி’ என்ற பெயரில் ரத்தமும், சதையுமாக வெளியான 3 நிமிட பாடல் வரிகள் திரையில் ரஜினியின் ஆக்ஷன் அதிரடியை காண மேலும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. அனிரூத் இசையில் சூப்பர் சுப்பு வரிகளை தீ தனக்கே உரிய பாணியில் பாடி அசத்தி உள்ளார்.
”களவாணி கண்ணையா காளைக்கே கொம்ப சீவிப்புட்ட
அது முட்டி கிழிச்சி வீசாம தான் விடுமா ஒன்னைய
களவாணி கண்ணையா பாவத்த கணக்கா கூட்டிப்புட்ட
அது கூட்டி கழிச்சு தீக்காம தான் விடுமா ஒன்னைய
பகையாகி போனா பலியாவ வீணா
பணியாத ஆளு பாரு, பரியேறும் சாரு
புரிஞ்சிடாத பாத நூறு, இவன் ரூட்டே வேறு
களவாணி கண்ணையா கரண்டுல கைய வச்சுப்புட்ட
அத தொட்ட உடனே தூக்காம தான் விடுமா ஒன்னைய
களவாணி கண்ணையா புலிக்கே பசிய தூண்டிப்புட்ட
அது ரத்தக்காவு வாங்காம தான் விடுமா ஒன்னைய”
பாடல் வரிகள் படத்தில் எதிரிகளை ரஜினி வேட்டையாட உள்ளதை குறிப்பதாக உள்ளது. ”புலிக்கே பசிய தூண்டிப்புட்ட, கரண்டுல கைய வச்சிப்புட்ட, காவு வாங்காம விடுமா” வரிகள் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் ஏற்படுத்தி உள்ளது. அதற்கு ஏற்றார் போல், ஜுஜுபி என பின்னணி கோரஸ் குரலும், அனிரூத்தின் மிரட்டல் இசையும், ரஜினியின் மிரட்டல் காட்சிகளும் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
வரும் 28ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராஃப், சுனில் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.