5 Years Of Kolamavu Kokila : பில்டப் கொடுப்பது இல்லை.. உடைப்பதுதான் நெல்சனின் ஸ்டைல். கோலமாவு கோகிலா வந்து 5 வருசமாச்சு
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் வெளியாகின்றன
ஜெயிலர் படத்தை இயக்கி இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலிப்குமார். கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் நெல்சன் இயக்குநராக அறிமுகமான கோலமாவு கோகிலா படம் வெளியானது. இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது கோலமாவு கோகிலா.
கோலமாவு கோகிலா
தனக்கு கிடைக்கும் அளவான சம்பளத்தில் தனது அம்மா அப்பா, தங்கையைக் காபாற்றி வருகிறார் கோகிலா( நயன்தாரா). அவரை ஒன்சைடாக காதலித்து வருகிறார் கோகிலாவின் வீட்டிற்கு எதிரில் கடைவைத்திருக்கும் சேகர்( யோகி பாபு) மறுபக்கம் ஒரு பெரிய கடத்தல் கும்பல் போலீசுக்குத் தெரியாமல் சின்ன சின்ன போதைப் பொட்டலங்களை (கோலமாவை) கடத்தி வருகிறது. இந்த போதைப் பொருள் கடத்தும் கும்பலை எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் அவர்களுக்கு உதவி செய்கிறாள் கோகிலா (பிரச்சனையை உருவாக்கியது கோகிலாதான்) . திடீரென்று தனது அம்மாவிற்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்து அவரை குணப்படுத்த 15 லட்சம் தேவைப் படுவதால் எத்தனையோ இடங்களில் முயற்சி செய்து பணம் கிடைக்காமல் கடைசியாக அதே போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் வேலை கேட்டு செல்கிறார் கோகிலா. இதில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன, தனது அம்மாவை குணப்படுத்த அவருக்குத் தேவையான பணம் அவருக்கு கிடைக்கிறதா. அந்த கடத்தல் கும்பலில் இருந்து அவர் எப்படி தப்பித்து வெளியே வருகிறார் என்பதே கதை.
இனிமேல் பயங்கரமா இருக்கும்
கதையாக கேட்பதற்கு ஏதோ சோகமான அல்லது த்ரில்லர் கதையைக் கேட்பதுபோல் இருக்கிறதில்லையா. ஆனால் கதையில் இல்லை கதாபாத்திரங்களில் வைக்கிறார் நெல்சன் தனது ட்விஸ்ட்களை. தனக்கு துரோகம் செய்தவனை கொடுரமாக கொல்லும் வில்லன் முதல் இதுவ்ரை நாம் படங்களிலோ நிஜத்திலோ பார்த்திராத சில கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் நெல்சன். உதாரணத்திற்கு ரெடின் கிங்ஸ்லி நடித்திருக்கும் டோனி மற்றும் கோகிலாவின் தங்கை சோஃபியை காதலிக்கும் எல்.கே கதாபாத்திரம்
பில்டு அப்களை உடைக்கும் நகைச்சுவை
கமர்ஷியல் சினிமாக்களில் மிக முக்கியமான ஒரு அம்சம் என்றால் பில்ட் அப் கொடுப்பது. அடுத்ததாக நடக்க இருக்கும் எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அதற்கு முந்திய காட்சியில் ஒரு சின்ன பில்ட் அப் இருப்பது வழக்கம். ஆனால் ஒரு காட்சியில் பெரியளவில் பில்ட் அப் கொடுப்பது நெல்சனுக்கு பிடிக்காதோ, ஒவ்வொரு காட்சியிலும் ஒரு சின்ன பில்ட் அப்பை உருவாக்கி அதை உடனே தண்ணீர் குடத்தை தரையில் விட்டதுபோல் உடைத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார். இது பார்வையாளர்களுக்கு ஒரு புது விதமான நகைச்சுவை உணர்வை தருகிறது. நெல்சனின் படங்களில் இருக்கும் பிரத்யேகமான ஹ்யூமரை உருவாக்குவது இந்த ஒரு அம்சம்தான்.