கூலியை விடாமல் விமர்சித்த ரசிகர்கள்...திசைதிருப்ப தான் இந்த ரஜினி கமல் அறிவிப்பா?
கூலி படத்தின் வசூல் முதல் வாரத்தில் குறைந்து வரும் நிலையில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருப்பதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என கூறப்படுகிறது

ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் சமூக வலைதளத்தில் பெரிய பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக இந்தியன் 2 , தக் லைஃப் ஆகிய படங்கள் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட நிலையில் தற்போது கூலி படத்தையும் அப்படகுழுவினரையும் ட்ரோல் செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டதால் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் குழந்தைகள் படம் பார்க்க அனுமதிக்கப்படாதது ஃபேமிலி ஆடியன்ஸ் இடையே ஏமாற்றத்தை உண்டாக்கியது. முதல் வாரத்திலேயே படத்தின் வசூலில் பெரியளவில் சரிந்துள்ளது.
முதல் வாரத்தில் குறைந்த கூலி வசூல்
கூலி திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் நிலவரத்தை சன் பிக்ச்சர்ஸ் இதுவரை வெளியிட்டுள்ளது. முதல் நாளில் உலகளவில் ரூ 151 கோடி வசூலித்தது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக கூலி அமைந்துள்ளது. 4 நாட்களில் 404 கோடி படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல்கள் பொய்யென ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். ஆனால் நெகட்டிவ் விமர்சனங்களால் முதல் வாரத்திலேயே திரையரங்குகளில் கூட்டம் குறையத் தொடங்கியது. இப்படியான நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி கமல் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
லோகேஷ் இயக்கத்தில் ரஜினி கமல் இணைவது உண்மையா ?
திரையரங்கில் கூலி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி கமல் இணைந்து நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. பலர் இந்த தகவலை உறுதிபடுத்தாமல் பகிரத் தொடங்கினர். இந்த தகவலை முதலில் வலைப்பேச்சு சேனல் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தது. கைதி 2 படத்திற்கு முன்பாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி கமல் நடிக்க லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி கூலி படத்தின் மீதிருந்த ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளது. இந்த தகவல் உண்மையா அல்லது கூலி விமர்சனங்களில் இருந்து தப்பிக்க இந்த மாதிரியான தகவல் திட்டமிட்டு பரப்படுகிறதா என்கிற கேள்வி எழாமல் இல்லை.
கூலி படம் முடிந்ததும் அடுத்து உடனே கைதி 2 படத்தை இயக்கப்போவதாக லோகேஷ் கனகராஜ் பேட்டிகளில் தெரிவித்திருந்த நிலையில் இப்படி ஒரு தகவல் வெளியாகி இருப்பது கார்த்தி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.





















