Indian 2: இந்தியன் 1 - ஓல்ட் இஸ் கோல்ட் ஸ்டோரி.. சாதனைகளை முறியடிக்குமா 2வது பாகம்?
Indian Vs Indian 2: தசாவதாரத்தில் 10 அவதாரங்கள் எடுக்க தனக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தது இந்தியன் தாத்தா தான் என கமல்ஹாசனே பல முறை தெரிவித்திருக்கிறார்.
உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம், உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வரவேற்பும் விமர்சனங்களும் குவிந்து வரும் நிலையில், அந்தக் காலத்தில் கமலின் இந்தியன் - 1 திரைப்படம் செய்த சாதனைகளை, இந்தக் காலத்தில் இந்தியன் 2 மூலம் கமல் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படியென்ன சாதனையைச் செய்தது இந்தியன் 1 (Indian) திரைப்படம் என்பதை இனி பார்ப்போம்!
அசத்திய இந்தியன் 1:
1996ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை, ‘பிரமாண்ட இயக்குநர்’ ஷங்கர் தான் இயக்கி இருந்தார். கமலின் தோற்றம், அதாவது இந்தியன் தாத்தா அப்போது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தசாவதாரத்தில் 10 அவதாரங்கள் எடுக்க தனக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தது இந்தியன் தாத்தா தான் என கமல்ஹாசனே பல முறை தெரிவித்திருக்கிறார்.
அந்தக்காலத்தில், ஊர்மிலா மடோன்கர், மனீஷா கொய்ராலா, சுகன்யா என 3 ஹீரோயின்கள், ஏ ஆர் ரஹ்மான் இசை உள்ளிட்ட பல பிரமாண்டங்களுடன் ஏ.ஏம். ரத்னம் தயாரிப்பில், கமலும் ஷங்கரும் இணைந்து உருவாக்கிய படம். இந்தப் படத்திற்கான தயாரிப்பிற்கு அப்போது ஆன செலவாக கூறப்பட்டது 18 கோடி ரூபாய். அந்தக்காலத்தில், அதாவது 1996இல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய படம் எனக் கூறப்பட்டது. உறுதியாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய படம் எனச் சொல்லலாம். தற்போது போல், கணக்குகளைத் துல்லியமாக கூறுவது அப்போது நடைமுறையில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தோராயமாக எடுத்துக் கொண்டாலும், இந்தியன் அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட் படம்.
ALSO Read | Indian 2 Review: ரசிகர்களுக்கு விருந்தா? லஞ்சத்தை ஒழிக்க மருந்தா? இந்தியன் 2 முழு திரை விமர்சனம் இதோ
உலகம் முழுவதும் தமிழில் வெளியான இந்தப்படம், இந்தியில் ஹிந்துஸ்தானி என்ற பெயரில் வெளியானது. வசூல் வேட்டையைப் பொறுத்தமட்டில், 100 நாட்கள் வெற்றிகரமாக பல இடங்களில் ஓடிய இந்தப் படம் ஒட்டுமொத்தமாக, 65 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அதில், தமிழகத்தில் மட்டும் 24 கோடி ரூபாயும், அன்றைய ஆந்திராவில் 12 கோடி ரூபாய், கேரளாவில் 3 கோடி ரூபாய், கர்நாடகத்தில் 4 கோடி ரூபாய் என கல்லா கட்டியுள்ளது. இது அப்போது மிகப்பெரிய வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, வெளிநாடுகளில் 8 கோடி ரூபாய் வசூல் செய்தது என அந்தக் கால சினிமா பத்திரிகைகளில் குறிப்பிட்டுள்ளனர்.
மியூசிக் உரிமம் உள்ளிட்ட மற்ற வசூல் அனைத்தையும் சேர்த்தால், ஆக மொத்தம்,தோராயமாக 65 கோடி ரூபாய் வசூலித்து, அந்த ஆண்டில் சூப்பர் ஹிட், இன்றைய பாணியில் சொல்ல வேண்டுமென்றால், பிளாக்பஸ்டர் படமாக வெற்றிபெற்றது இந்தியன் முதல் பாகம். அதுமட்டுமல்ல, மற்றுமொரு சாதனையும் அந்தக் காலக்கட்டத்தில் செய்தது கமலின் இந்தியன். அது என்னவென்றால், இந்தப் படத்திற்கு ஒட்டுமொத்த 5.2 கோடி டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாகவும் அன்றைய காலத்தில் செய்தி வெளியாகி, சினிமாவின் தலைப்புச் செய்தியாகப் பேசப்பட்டது. அந்த அளவுக்கு, இந்தியன் தாத்தா அப்போது மேஜிக் செய்திருந்தார்.
இந்தியன் 2 மேஜிக்:
1996ஆம் ஆண்டு கமல் - ஷங்கர் கூட்டணியின் வந்த இந்தியன் படம் செய்த வசூல் சாதனைகள் அனைத்தும் இந்தியன் 2 (Indian 2) நிச்சயம் முறியடிக்கும். ஏனெனில், இன்றைய வசூல் முறையே பெரிய வித்தியாசமாக இருக்கிறது. நிறைய தியேட்டர்கள், நிறைய காட்சிகள், டிவி, ஓடிடி, மியூசிக் உரிமம் என பல விதங்களில் வசூல் செய்ய முடியும். எனவே, வசூல் வேட்டையில் மட்டுமல்ல, எடுக்கப்பட்ட பட்ஜெட்டிலும் அந்தக்கால இந்தியனை விட அதிகமாகி இருக்கும் என்பதில் ஐயம் வேண்டாம். நமக்கு கிடைத்த தகவலின்படி, அந்தக் கால இந்தியன் 18 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது.
பணவீக்கத்தை எல்லாம் கணக்கில் வைத்துப் பார்த்தால், இன்றைய நிலையில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் எனச் சொல்லலாம். ஆனால், இன்று வெளியான இந்தியன் 2 நிச்சயம் அதைவிட அதிக செலவாகி இருக்கும் என நினைக்கிறேன். இதுவரை வெளிப்படையாக தயாரிப்பாளர்கள் சொல்லவில்லை. விரைவில் தெரிந்துக் கொள்ளலாம்.
இந்தியன் முதல் பாகம் வெளிவந்த 1996ஆம் ஆண்டில், ஹாலிவுட்டில் தி ராக், மிஷன் இம்பாஸிபல், இன்டிபெண்டன்ஸ் டே போன்ற சூப்பர் ஹிட் படங்களும் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் அமீர்கான் நடித்த ராஜா இந்துஸ்தானி, சன்னி தியோல் நடித்த ஜீத், கத்தக் போன்ற சூப்பர் ஹிட் படங்களும் வெளியாகின. இந்தியன் 2 மட்டுமல்ல, இந்தியன் 3 படமும் வெளிவரப்போகிறது என்பதும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்தியன் முதல் பாகம் போல், 2-ம் பாகமும் பல்வேறு சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்ப்போம்!