Vani Jayaram Passes Away: 'மறைந்தது கானக்குயில்..' இந்தியாவின் பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார் - ரசிகர்கள் சோகம்..!
Vani Jayaram: தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடியுள்ளார். சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
இந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்(Vani Jayaram). கோடிக்கணக்கான ரசிகர்களை தன் இனிய குரலால் வசீகரித்த வாணி ஜெயராம் உயிரிழந்தார். அவருக்கு வயது 78.
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் இன்று அவரது வீட்டில் நெற்றியில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இசைப்பயணம்
வேலூரில் பிறந்த வாணி ஜெயராமின் குடும்பம் இசைப் பரிச்சயமும் பக்தியும் மிக்கது. கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசை பயின்ற வாணிக்கு சிலோன் வானொலியில் ஒலிபரப்பான லதா மங்கேஷ்கர், முகம்மது ரபி, மன்னா டே ஆகியோரின் பாடல்களைக் கேட்டு திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.
பின்னர் சென்னை வந்து ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த அவருக்கு வங்கியில் வேலை கிடைத்தது. வாணியின் இசை ஆர்வத்தை ஊக்குவித்த அவரது கணவர் ஜெயராம், வாணி உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொள்ள காரணமாக அமைந்தார்.
ALSO READ | Vani Jairam: மறைந்த பாடகி வாணி ஜெயராமின் கடைசி வீடியோ... சோகத்தில் திரைத்துறையினர்!
பிரபல பாடல்கள்
1971 ஆம் ஆண்டு குட்டி என்ற இந்தி படத்தில் பாடகியாக அறிமுகமான அவர் 1974 ஆம் ஆண்டு தீர்க்க சுமங்கலி படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல் பாடி பிரபலமானார்.
‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’, ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஆகிய பாடல்களுக்காக பெரிதும் அறியப்பட்ட வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடியுள்ளார்.
5 தலைமுறைகளாக பாடிய பாடகி
1971 ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து தலைமுறைகளாக பாடி வந்துள்ள வாணி ஜெயராம், மூன்று முறை தேசிய விருதுகள் வென்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இசையமைப்பாளர்களான ஜி. தேவராஜன், எம்.எஸ். விஸ்வநாதன் தொடங்கி, இளையராஜா வரை பெரும் இசையமைப்பாளர்கள் அனைவரது இசையிலும் பாடி தன் தேன் குரலால் கட்டிப்போட்டுள்ளார் வாணி ஜெயராம்.
சென்ற வாரம் அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அரசுக்கு பாடல் பாடி நன்றி தெரிவித்து வீடியோ பகிர்ந்திருந்தார். ”52 ஆண்டுகளாக திரை இசைத்துறையில் 19 மொழிகளில் பாடி மிக நீண்ட பயணம் மேற்கொண்ட எனக்கு இந்த விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தற்போது பத்ம பூஷண் விருதைப் பெறுவதற்கு முன்பே வாணி ஜெயராம் உயிரிழந்துள்ளது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.