Abirami Ramanathan IT Raid: பிரபல படத்தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு!
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பிரபல திரைப்பட தயாரிப்பாளராக உள்ளவர் அபிராமி ராமநாதன். திரைப்பட தயாரிப்பாளர் மட்டுமின்றி பல தொழில்களும் இவர் செய்து வருகிறார். தமிழ் திரையுலகத்திலும், தமிழ்நாட்டிலும் முக்கிய பிரமுகராக விளங்கும் அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான அலுவலகங்களில் ஒன்று போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் எஸ்டேட் இரண்டாவது சாலையில் அமைந்துள்ளது.
வருமான வரித்துறை சோதனை:
இந்த நிலையில், அபிராமி ராமநாதனின் அலுவலகத்தில் இன்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மாலை 4 மணி முதல் 12 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அவரது அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அபிராமி ராமநாதனின் மேலாளர் மோகன் சென்னை மந்தவெளியில் வசித்து வருகிறார். அபிராமி ராமநாதனின் வீடு மட்டுமின்றி, அவரது மேலாளர் மோகன் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபிராமி ராமநாதன் உன்னோடு கா, அபிராமி, வினோதய சித்தம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகள் என பலரது வீடுகளிலும் தொடர்ந்து அதிரடியாக சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், பிரபல படத்தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் இன்று சோதனை நடைபெற்றுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகமான அபிராமி மால் இவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Kangana Ranaut : வரும் மக்களவை தேர்தலில் போட்டியா? : பதில் அளித்து அதிர்ச்சி கொடுத்த கங்கனா ரனாவத்
மேலும் படிக்க: Israel Hamas War: ”காஸாவில் நடக்கும் கருணையற்ற கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நேரம் இது” - இர்பான் பதான் உருக்கம்!