Kamal Haasan: அடடா..! தக் லைஃப் செய்ய போய், பிரச்னையில் சிக்கிய கமல் - என்ன பேசியிருக்காரு தெரியுமா?
Kamal Haasan Thug Life: தக்லைஃப் திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்று கமல்ஹாசன் சொன்ன மொழி தொடர்பான கருத்து, கர்நாடகாவில் சர்ச்சையாக வெடித்துள்ளது.

Kamal Haasan Thug Life: தக்லைஃப் திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்று கமல்ஹாசன் சொன்ன மொழி தொடர்பான கருத்துக்கு கர்நாடக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சர்ச்சையாக மாறிய கமல்ஹாசன் பேச்சு
கமல்ஹாசன் நடித்து தயாரித்து, மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜுன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு படக்குழு தீவிர புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் கமல்ஹாசன் அடங்கிய குழுவினர் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அவர் பேசிய ஒரு கருத்து தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவராஜ் குமாரும் இதில் பங்கேற்றார். அப்போது கமல்ஹாசன் மொழி தொடர்பாக பேசிய கருத்துக்கு, அம்மாநில பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
கமல்ஹாசன் சொன்னது என்ன?
நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “ உயிரே, உறவே, தமிழே.. இந்த இடத்தில் இது தான் என்னுடைய குடும்பம். அதன் காரணமாகவே சிவராஜ்குமார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதன் காரணமாகவே எனது பேச்சை உயிரே, உறவே, தமிழே என தொடங்கினேன். உங்கள் மொழியான கன்னடமும் தமிழில் இருந்து தான் பிறந்தது. எனவே நீங்களும் எனது குடும்பத்தின் ஒரு அங்கம் தான்” என கமல்ஹாசன் பேசினார். இதனை வன்மையாக கண்டித்துள்ள கர்நாடகா பாஜக மாநில தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, “கமல் பண்பாடற்ற முறையில் நடந்துகொண்டு, கன்னடத்தை அவமதித்ததாக” குற்றம்சாட்டியுள்ளார்.
பொங்கி எழுந்த பாஜக
விஜயேந்தர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ ஒருவர் தனது தாய்மொழியை நேசிக்க வேண்டும். ஆனால், அதன்பேரில் மற்றொருவரின் தாய்மொழியை அவமரியாதை செய்வதை பண்பாடற்றது. குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டை கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்துள்ள கமல்ஹாசன், தனது தமிழ் மொழியை மகிமைப்படுத்துவதில் நடிகர் சிவராஜ்குமாரை இணைத்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவம் மற்றும் ஆணவத்தின் உச்சம். எந்த மொழி எந்த மொழியைப் பெற்றெடுத்தது என்பதை வரையறுக்க கமல்ஹாசன் ஒரு வரலாற்றாசிரியர் அல்ல” என்று பாஜக மாநில தலைவர் சாடியுள்ளார்.
தக் லைஃப் படத்திற்கு எதிர்ப்பு:
பாஜகவை தொடர்ந்து கன்னட ஆதரவு குழுக்கள் கமல்ஹாசனுக்கு எதிராகக் களமிறங்கி, அவரது தக்லைஃப் படத்தை மாநிலத்தில் வெளியிட தடை விதிக்க வலியுறுத்தி வருகின்றனர். பெங்களூருவில் திரைப்பட போஸ்டர்களையும் கிழித்து எறிந்தனர். தக் லைஃப் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது தேசிய விருது பெற்ற இயக்குனர் மணிரத்னத்துடன் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, கமல் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமாகும். இருவரும் கடைசியாக 'நாயகன்' படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.





















