Ilayaraja | ஒரே ஃபோன்.. 13 வருஷ விரிசலை முடித்துவைத்த இளையராஜா! நடக்குமா ராஜா - வைரமுத்து சந்திப்பு.?
இளையராஜாவும், கங்கை அமரனும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு பாவலர் சகோதரர்களின் சந்திப்பு எனபதிவிட்டார்.
எப்போதுமே ராஜா...
''1970களின் தொடக்கத்தில் பிறமொழிப் பாடல்களைச் சுமந்து திரிந்த தமிழ்ச்செவிகள் விடுதலை பெற்று, தமிழ்ப்பாடல்களை நோக்கித் திரும்பியதற்கு இளையராஜாவே காரணமெனலாம். எழுபது, எண்பதுகளில் மெல்லத் தோன்றிப் புது வேகம்கொண்ட சமூக மாற்றங்களின் குறியீடாக இளையராஜாவின் இசை திகழ்ந்தது. பின்னணி இசையிலும் பாடல் இசையிலும் விடுபட்டுப்போன வாய்மொழித் தன்மை, யதார்த்தம் ஆகியன பொதிந்த அவருடைய இசை,சாமானியரையும் ஈர்த்தது; அவர்களது வாழ்வின் தருணங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றதோடு அமைப்புக்கு அப்பாற்பட்ட இசை இயக்கமாகவும் மாறியது. அவர், தமிழ்ச் செய்யுளின் யாப்போசைக் கட்டமைப்புக்குள் இருக்கின்ற இசை ஒழுங்கைப் புரிந்துகொண்டு திரைப்பாடல்களைச் செவியுணர் கனிகளாகவும் பண்பாட்டு வெளிப்பாடாகவும் மாற்றிய பெருமைக்குரியவர்''
இந்த வரிகள் அனைத்தும் ப்ளஸ் 1 தமிழ் பாடப்புத்தகத்தில் இளையராஜா குறித்து இடம்பெற்றுள்ள வரிகள். வார்த்தைக்கு வார்த்தை 100 சதவீதம் உண்மைதான் என சொல்லவைக்கும் இந்த வரிகளைத் தாண்டியும் இருக்கின்றன இளையராஜாவின் உயரம்.
கங்கை அமரன்..
1970க்கு பிறகே தமிழ் சினிமாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர் இளையராஜா. அவருடனே நிழலாக பயணப்பட்டவர் அவரது சகோதரர் கங்கை அமரன். கங்கை அமரன் இயக்கிய படங்களுக்கெல்லாம் இளையராஜா இசையமைத்து இருக்கிறார். பாவலர் சகோதரர்கள் என அழைக்கப்படும் இந்த சகோதர பந்தத்தில் இடையே விரிசலும் விழுந்தது. இதுதான் காரணம் என குறிப்பிட்டு எந்த தகலும் இல்லையென்றாலும் இருவரும் 10 வருடங்களுக்கு மேலான பேசிக்கொள்ளவில்லை என்பதை தமிழ் திரையுலகம் அவ்வப்போது உறுதி செய்தது. இடையே, பாடல்களின் காப்பிரைட்ஸ் தொடர்பான இளையராஜாவின் கருத்துக்கெல்லாம் எதிர்ப்பு குரலை பதிவு செய்தார் கங்கை அமரன்.
திடீர் சந்திப்பு.. 13 வருடம்..
இந்த நிலையில் நேற்று வெளியான ஒரு புகைப்படம் தமிழ் இசை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இளையராஜாவும், கங்கை அமரனும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு பாவலர் சகோதரர்களின் சந்திப்பு எனபதிவிட்டார். ஆனால் வெறும் புகைப்படம் இல்லை அது. பல ஆண்டுகால விரிசலுக்கான முடிவு என பதிவிட்டனர் ரசிகர்கள். இது குறித்து வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கங்கை அமரன், அண்ணன் அழைப்பதாக சொன்னார்கள். நான் அதற்குத்தான் இத்தனை காலமாக காத்திருந்தேன். உடனடியாக போய் சந்தித்தேன். ஒன்றரை மணிநேரம் பேசிக்கொண்டோம். இனிமேல் சந்தோஷமாக இணைந்திருப்போம். 13 வருடங்களாகப் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. அது பெரும் துயரம். இனிமேல் அது நடக்காது. சந்தோஷமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்
ரஜினி.. கங்கை அமரன்.. அடுத்து...
அன்று ரஜினியுடன் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை இளையராஜா பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் நேற்று சகோதரர் கங்கை அமரனை அழைத்து பேசியுள்ளார் ராஜா. இந்த வரிசையில் ராஜா அடுத்தடுத்து யாரை சந்திக்க போகிறார்? திடீர் சந்திப்புகளுக்கும், நினைவு மீட்டலுக்கு என்னக் காரணம் என ரசிகர்கள் பல யூகங்களை பதிவிட்டு வருகின்றன. இந்த வரிசையில் வைரமுத்து வந்துவிட்டால் தமிழ் சினிமாவின் பெரிய குறை தீர்ந்துவிடும் என ரசிகர்கள் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.