Annapoorani Amma : ’மியாவ் என கத்தும் பூனைகளின் பாதங்கள் அல்ல என்னுடையது’ அன்னபூரணி அரசு அம்மா பராசக்தி வசனம் பேசினால்..!
பக்தர்களுக்கு வைப்ரேஷன் கொடுக்கிறேன், சீட்டில் உட்கார்ந்தப்படி சிலிர்த்தெழுந்து ஆடுகிறேன். குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். எதிர்பார்ப்பீர்கள் இதையெல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று
தமிழகம் விசித்திரம் நிறைந்த பல நிகழ்வுகளை சந்தித்திருக்கிறது, புதுமையான மனிதர்களை கண்டிருக்கிறது. ஆனால், இந்த திடீர் சாமியார்கள் விசித்திரமும் அல்ல, சாமியாடும் அன்னப்பூர்ணி அரசு அம்மாவும்(annapoorani arasu amma) இந்த சமூகத்திற்கு ஒன்றும் புதிதும் அல்ல.
வாழ்க்கை பாதையிலே சர்வசாதாரணமாக தென்படக்கூடும் ஜீவன்தான், அன்னப்பூரணியும் அவர் சேர்த்துக்கொண்டிருக்கும் அரசு அம்மாவும். அரசு அம்மாவே, பராசக்தி சிவாஜியாக மாறி கலைஞர் கருணாநிதியின் வசனத்தை பேசினால் எப்படி இருக்கும் என ஒரு கற்பனை..!
பக்தர்களுக்கு வைப்ரேஷன் கொடுக்கிறேன், சீட்டில் உட்கார்ந்தப்படி சிலிர்த்தெழுந்து ஆடுகிறேன். குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் இதையெல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று, இல்லை. நிச்சயமாக இல்லை.
பத்கர்களுக்கு வைப்ரேஷன் கொடுத்தேன், வைப்ரேஷனே கூடாது என்பதற்கா ? இல்லை, போனில் வரும் வைப்ரேஷன் போதாது என்பதற்காக. சீட்டில் உட்கார்ந்திருந்தபடி சிலிர்த்தெழுந்து ஆடினேன். பிறர் ஆடக் கூடாது என்பதற்கு அல்ல. டான்ஸ் என்ற பெயரில் இப்போது படங்களில் போடப்படும் குத்து டான்ஸ்களை குறிவைத்து குலைப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் எவர்க்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக பாட்டி சுட்ட வடையை கூட அலேக்காக தூக்கி செல்கிறதே காக்கை, அதைபோல.
என்னை போலி சாமியார் என்கிறார்களே ? இந்த போலி சாமியாரின் வாழ்க்கையிலே கொஞ்சம் பின்னோக்கி நடந்துபார்த்தால், அவள் கடந்துவந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்கமுடியும்.
மியாவ் என கத்தும் பூனைகளின் பாதங்கள் அல்ல என் பாதைகள், அவற்றில் பாறாங்கல்லுக்குள் இருக்கும் தேள்கள் நிறைந்திருக்கின்றன. வெட்கத்தை தீண்டியதில்லை நான், ஆனால் வெட்கமா இல்லையா என்ற வார்த்தைகள் என்னை தீர்த்துக்கட்ட துடித்திருக்கின்றன.
கேளுங்கள் என் கதையை, தீர்ப்பு எழுதுவதவற்கு முன் தயவு செய்து கேளுங்கள். தமிழ்நாட்டிலே ஆவடி என்னும் திருவிடத்திலே பிறந்தவள்நான். தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா ? சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி என்னை தொலைக்காட்சியில் பொய் சொல்ல வைத்தது. அதையே தொழிலாக்க முயன்றேன். என்னை பற்றி எல்லா மீடியாக்களுக்கும் பேட்டி கொடுக்கிறாரே ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா’ லக்ஷ்மி, அவர் ஷோவில் தவறி விழுந்தவர்களில் நானும் ஒருவள். அதிலிருந்து தட்டுதடுமாறி எழுந்திருக்க முயன்றேன்.
ஆனால், ஆதரவற்று நின்றேன். அதனால் அரசோடு சேர்ந்தேன். கடைசியில் சக்தியாக இருக்கிறேன், சக்தியாக இருக்கிறேன் என்று கத்தினேன். காணவந்த பக்தர்களை கண்டேன், காசு தரும் கடாட்ஷமாக. ஆம், என் பாதம் கழுவிடும் அடிபொடிகளாக. என் பெயரோ அன்னப்பூரணி சோற்றின் இன்னொரு பெயர். ஆனால், சோறு மட்டுமே தின்றுக்கொண்டிருக்க நினைக்கவில்லை நான்.
சீரழிந்த நான் செழித்துவாழ நினைத்தேன், கழுத்திலே மாலை, கையிலே பில்லா மோதிரம். அன்னப்பூரணி, அரசு ஆனார் பின்னர் அம்மாவும் ஆனார். அன்னபூரணிக்கு கருணை காட்டினார்கள் பலர், சிலர் கைம்மாறாக என கடைக்கண் பார்வை கேட்டனர். அன்னப்பூரணியாக இருந்த என்னை என் பக்தர்கள் அம்மாவாக பார்த்தனர். என்னை சாதாரணமா நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள் பலர், ஆனால், அது என்னை உணர்ந்தால்தான் தெரியும். நான் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறேன். இங்கு நடக்கிறது என்பது.
என்னை நானே ஆதிபராசக்தி என்று சொன்னேனா ? என்னை நான் கடவுள் என்று கத்தினேனா ? இல்லையே, என்னை உணர்ந்த என் குழந்தைகள்தான் என்னை ஆலஹால விஷத்தை ஆட்கொண்டவள் என்றார்கள். அந்தப் பக்கம் அவர்கள் அழுதார்கள், இந்த பக்கம் நான் கதறி கதறி அழுதேன். அழுகைக்கூடவா அனுமதி வாங்கவேண்டும் ?
கைலாஷ நாதர், கதவை திறக்க சொன்ன கருமவீரர், நான் ஒரு எச்சக்கல என்று சொன்ன நித்தியர் அவரே நானே கடவுள் என்றிருக்கிறார், நம்பி வந்தவர்களை ஏமாற்றி பிழைப்பதற்காக. அதையே முறையைதான் கையாண்டுயிருக்கிறாள் இந்த அரசு அம்மா அன்னப்பூரணி. இது எப்படி குற்றமாகும் ?
தமிழ்நாட்டில் பிறந்த ஒரு தமிழனுக்கு வாழ வழியில்லை, தமிழ்நாட்டில் பிறந்த ஒரு பெண்ணுக்கு அம்மா என்று சொல்வதற்கு அருகதை இல்லை. என் அரசு மட்டும் இன்னும் கொஞ்சம் ஆதரவாக இருந்திருந்தால் அம்மாவான நான் பெரியம்மாவாக கூட ஆகியிருப்பேன். விட்டார்களா இவர்கள் சின்னம்மாவாக கூட ஆக விடவில்லையே ?
பயந்து ஓடினேன். காவல்துறையில் என் மீது புகார் கொடுக்கப்பட்டது. மீண்டும் ஓடினேன் இந்து மக்கள் கட்சி இன்னொரு புகாரை கொடுத்தது. ஓடினேன் ஓடினேன் சென்னை கமிஷனர் ஆபிசுக்கே ஓடினேன்.
அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும், என் வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் இன்று போலி சாமியார் என்று சொல்லுவோர். செய்தார்களா ? தீட்சை கொடுக்க விட்டார்களா இந்த அன்னப்பூரணியை ? இனிமேல் என்ன செய்வேன். அம்மா ஆக நினைத்தால் சும்மா என ட்ரெண்ட் பண்ணுவார்கள். இனி கொஞ்சநாள் சும்மா இருந்து, மீண்டும் ஆக முயல்வேன். அப்போது பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என..!