‛அழகி தந்த வலியை சாகும் வரை மறக்க முடியாது...’ அஜித்தின் ‛ரெட்’ தந்த வலியை சொன்ன இயக்குனர் தங்கர் பச்சன்!
கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான அழகி திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகள் ஆகிவிட்டது.
அழகி படத்தில் பார்த்திபன் முன்னணி கதாநாயகனாகவும், தேவயானி, நந்திதா தாஸ், மோனிகா, விவேக், ஜார்ஜ் மரியம் ஆகியோர் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இசையில் இந்த படம் உருவானது. தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது.
இந்த அழகி படத்தின் இயக்குனர் தங்கர் பச்சன் படம் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார். "அழகி படத்தை கண்டவர்களை அக்கதை உறங்கவிடாது. அதனால் தான் வெளியாகி இருபது ஆண்டுகள் கடந்தும் அழகி திரைப்படம் இன்று வரை பேசப்படுகிறது.
ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்க முனைந்ததற்காக நானும் நண்பரும் தயாரிப்பாளருமான உதயகுமார் அவர்களும் விவரிக்க முடியாத மனவேதனைகளை சந்தித்தோம். நான் கடந்து வந்த வழிகளையும் அவமானங்களையும் மறக்க நினைத்தாலும் இயலவில்லை. திரைப்பட வணிகர்கள் இப்படத்தை புறக்கணித்து ஒதுக்கியதுபோல் மக்களும் செய்திருந்தால் நான் காணாமல் போயிருப்பேன். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எத்தனையோ படங்கள் வெற்றிகளை குவிக்கின்றன. அவைகள் அனைத்தும் வணிக வெற்றியாகி மறக்கப்படுகின்றன. அழகி வெளியாகும் சமயத்தில் தான் நடிகர் அஜித்தின் “ரெட்” திரைப்படமும் வெளியானது. அனைத்து தியேட்டர்களிலும் அவரது படம் மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தது. எனது அழகி படத்ததை தியேட்டர்களில் போட மறுத்தார்கள். பிறகு பெரிய நடிகர்களின் படம் தியேட்டர்களில் முடிவுக்கு வரவே, அழகி திரைப்படத்தை 10 நாட்களுக்கு பிறகு வெளியிட்டார்கள். ஆனால் அந்த திரைப்பபடம் காலங்கள் கடந்து மக்களின் மனங்களில் நிறைந்து என்றென்றும் வாழ்கின்றன.
பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலையை https://www.youtube.com/watch?v=a7ScIfCfBlo காணலாம்.
என்னை சோர்ந்து விழாமல் தாங்கிப்பிடித்து வெற்றிப்படமாக்கி என்னாளும் நினைவில் வாழும் படைப்பாக மாற்றியவர்கள் மக்கள் மட்டுமே. வெறும் வணிக வெற்றியை மட்டுமே குறி வைத்து ஓடிக்கொண்டிருக்கும் இத்திரையுலகத்தில் என்னைப் போன்ற சிலர் அவர்களுடன் சமரசம் செய்து கொள்ள விரும்பாமல் பயணிக்கின்றோம்.
அழகியின் வெற்றி என் படைப்பாற்றலுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. மக்களின் நுட்பத்திற்கு கிடைத்த வெற்றி. என்னை பாராட்டு மழையில் மகிழ்வித்து வரும் அனைத்து உள்ளங்களுக்கு என்னாலும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். தங்கள் அனைவரின் விருப்பத்திற்கேற்ப மீண்டும் தரமான சிறந்த படைப்பை வெளிகொண்டுவர ஈடுபட்டுள்ளேன்.
இதே போன்ற ஒரு படைப்பினை மீண்டும் நான் தர வேண்டும் எனும் மக்களின் எண்ணத்தை பெரிதும் மதிக்கிறேன். தற்சமயம் திரைத்துறையில் அதற்கான சூழல் நிலவவில்லை என்பதுதான் உண்மை. இப்படத்தை தயாரிக்க நண்பர் உதயகுமார் என்னை நம்பி முன் வந்து முழுமையாக ஒப்படைத்தது போல் இன்னொருவர் அமையும் போது மக்களின் எண்ணமும் எனது எண்ணமும் நிறைவேறும். அழகி திரைப்படம் இருபது ஆண்டுகள் கடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அழகி படம் ஏற்படுத்திய தாக்கத்தை ஒவ்வொரு வரும் என்னிடம் பகிர்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
திரைப்பட வணிகர்களால் புறக்கணிக்கப்பட்ட அழகி எனக்குள் ஏற்படுத்திய அதிகப்படியான வலிகள், அவமானங்கள் நான் சாகும் வரை மறக்க முடியாதவை. அழகி திரைப்படத்தை வரலாற்றில் பேச வேண்டிய படமாக மக்கள் மாற்றினார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.