Rana Daggubati: "என் வலது கண்ணால் பார்க்க முடியாது” .. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாகுபலி நடிகர்..
பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தான் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தகவலை நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தான் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தகவலை நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தெலுங்கில் 2010 ஆம் ஆண்டு வெளியான லீடர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராணா டகுபதி. தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஹிந்தித் திரைப்படமான டம் மாரோ தம் படத்தில் நடிகை பிபாசு பாஷூவுடன் இணைந்து நடித்தார்.இந்த படத்தில் அவரது கேரக்டர் பெரும் பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும், இந்தியில் பேபி ஆகிய படங்களில் நடித்த ராணாவுக்கு 2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் திருப்புமுனையாக அமைந்தது.
இந்த படத்தில் பல்வாள்தேவனாக அவர் நடித்தது ராணாவின் நடிப்பில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. தமிழிலும் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா, காடன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் ராணா. சமீபத்தில் ராணா நடிப்பில் நெட்ஃபிக்ஸ் வெப் சீரிஸ் 'ராணா நாயுடு' வெளியானது. இந்த சீரிஸ் கடும் சர்ச்சைகளை சந்தித்துள்ளது. குறிப்பாக நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் ஓடிடி தளத்திற்கென எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாததால் ராணா மிக மோசமாக நடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராணா , தனது உடலின் பல பிரச்சனைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். அதாவது தன்னுடைய வலது கண் செயல்படவில்லை என்றும், இடது கண்ணால் மட்டுமே தன்னால் பார்க்க முடியும் என அதிரவைக்கும் தகவலை அவர் கூறியுள்ளார். மேலும் தன் வலது கண் வேறொருவரின் கண் என்றும் கூறியுள்ளார். இதற்காக கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இறந்தவர் ஒருவரின் கண் எனக்கு பொருத்தப்பட்டுள்ளது. நான் என் இடது கண்ணை மூடினால் என்னால் எதையும் பார்க்க முடியாது எனவும் ராணா தெரிவித்துள்ளார்.
மேலும் எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் என் நம்பிக்கையை கைவிடவில்லை. உடல் பிரச்சினையால் சிலர் உடைந்து விடுகின்றனர். இந்த சமயங்களில் நம்மை ஒரு அழுத்தம் ஆக்கிரமிக்கத்தான் செய்யும். ஆனால் எல்லா பிரச்சினைகளும் சரியாகும் எனவும் அந்த நேர்காணலில் ராணா தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் அழுதுக் கொண்டிருந்த சிறுவனை சமாதானம் செய்ய தன்னுடைய கதையை ராணா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.