Hina Khan: வேதனை! பிரபல பாலிவுட் நடிகைக்கு மார்பக புற்றுநோய் - ரசிகர்கள் பேரதிர்ச்சி
Hina Khan: இந்தி சின்னத்திரை மற்றும் பிக் பாஸ் 11 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஹினா கான் 3ம் நிலை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் இன்று பல நடிகைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு மீண்டு வந்துள்ளதை பார்க்க முடிகிறது. மனிஷா கொய்ராலா, சோனாலி பிந்த்ரே, மம்தா மோகன்தாஸ், லிசா ரே மற்றும் பலர் புற்றுநோய் பாதிக்கப்பட்டு அதற்கு தகுந்த சிகிச்சை மேற்கொண்டு நலமுடன் மீண்டு வந்துள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழப்பதையும் பார்க்க முடிகிறது.
அந்த வரிசையில் பாலிவுட் நடிகையான ஹினா கான் தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவரே வெளிப்படையாக சோசியல் மீடியா மூலம் தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி சின்னத்திரையில் மிகவும் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹினா கான். பல பிரபலமான சீரியல்களில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கத்ரோன் கே கிலாடி சீசன் 8 மற்றும் இந்தி பிக் பாஸ் சீசன் 11 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு முதல் ரன்னர் அப்பாக வெற்றி பெற்றார். நாகினி சீசன் 5 சீரியலில் நாகினியாக நடித்து பாராட்டுகளை குவித்தார். அன்லாக், ஷிண்டா ஷிண்டா நோ பாப்பா, ஹேக்கட் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். டேமேஜ்டு 2 என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை ஹினா கான் மார்பக புற்றுநோய் காரணமாக உயிருக்கு போராடி உயிரிழந்தார் என்பது போன்ற வதந்திகள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வந்தன. அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
"அனைவருக்கும் வணக்கம். சமீபத்தில் பரவி வரும் வதந்தி குறித்து ஹினாஹோலிக்ஸ் மற்றும் என்னை நேசிக்கும் மற்றும் அக்கறை கொண்ட அனைவருடனும் சில முக்கியமான செய்திகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோயால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சவாலான நோயறிதல் இருந்தபோதிலும், நான் நன்றாக இருக்கிறேன் என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.நான் வலிமையாகவும் உறுதியாகவும் இந்த நோயை முழு அர்ப்பணிப்புடன் எதிர்கொண்டு வருகிறேன். எனக்கு ஏற்கனவே சிகிச்சை தொடங்கிவிட்டது. இதில் இருந்து இன்னும் வலுவாக வெளியில் வர தேவையானவற்றை செய்து கொண்டு வருகிறேன்.
View this post on Instagram
இந்த நேரத்தில் நான் ப்ரைவசி அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன். உங்களின் அன்பும், ஆசீர்வாதங்களையும் நான் கேட்டு கொள்கிறேன். கடவுளின் ஆசீர்வாதத்தால் நான் இந்த நோயில் இருந்து விடுபட்டு முழுமையாக குணமடைந்து வருவேன் என நம்புகிறேன்" என நீண்ட குறிப்பு ஒன்றை பகிர்ந்து இருந்தார்.
ஹினா கான் இந்த பதிவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தைரியம் கூறி விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.