HBD Murugadoss: தொட்டதெல்லாம் வெற்றி.. விஜய், அஜித்தின் ஃபேவரைட்.. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பிறந்தநாள் இன்று..!
தமிழ் சினிமாவில் சிறந்த கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக அறியப்படும் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில் சிறந்த கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக அறியப்படும் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சின்ன அறிமுகம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறந்தவரான ஏ.ஆர்.முருகதாஸூக்கு கல்லூரியில் படிக்கும்போதே கதை எழுதுவதிலும் அதீத ஆர்வம் இருந்தது. அது காலப்போக்கில் திரைப்படங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வாரத்துக்கு ஏழு படங்கள் பார்த்து திரைப்பட கலையை கற்றுக்கொள்ள தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக சென்னைக்கு வரும் முருகதாஸ் முதலில் திரைப்பட கல்லூரியில் சேர முனைகிறார். அங்கு வாய்ப்பு மறுக்கப்பட மூத்த கதாசிரியர் கலைமணியின் உதவியாளராக பணிக்கு சேர்கிறார்.
காலத்தின் போக்கில் அவர் 'மதுரை மீனாட்சி' படத்துக்கு வசனம், ரட்சகன் படத்தில் உதவி இயக்குநர், கலுசுகுந்தம் ரா என்ற தெலுங்குப் படத்தில் துணை எழுத்தாளர் என விடா முயற்சியுடன் பணியாற்றினார். இதற்கிடையில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். இதன் நீட்சியாக அவருக்கு நடிகர் அஜித்துடன் சந்திப்பை எஸ்.ஜே.சூர்யா ஏற்படுத்திக் கொடுத்தார்.
சினிமா அறிமுகம்
அதுவே “தீனா” படத்தை அஜித்தை வைத்து எடுத்து தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கிறது. அஜித்தை ரசிகர்கள் செல்லமாக ‘தல’ என அழைக்க அப்படம் தான் காரணமாக அமைந்தது. அஜித்தின் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாக தீனா அமைய, 2வது படம் அன்றைய காலக்கட்டத்தில் நட்சத்திர அந்தஸ்திலிருந்த விஜயகாந்துடன் இணைய காரணமாக அமைந்தது.
முதல் படம் ஆக்ஷன் படம் என்றால், 2வது படமான ரமணா ஊழலுக்கு எதிரான சாட்டையை சுழற்றும் படமாக அமைந்தது. குறிப்பாக படம் முழுக்க எந்த பிசிறும் இல்லாமல் புத்திசாலித்தனமான திரைக்கதைக்குள் சுவாரஸ்யமான காட்சிகளை அடுக்கி ரசிகர்களை கட்டிப்போட்டார். குறிப்பாக இளைஞர்கள் எழுச்சியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கிளைமேக்ஸ் தமிழில் சிறந்த கிளைமேக்ஸ் பிரிவில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
புதுமையாக கதை.. இந்தி அறிமுகம்
3வது படமாக சூர்யா நடித்த கஜினி வெளியானது. இதில் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் என்னும் புதுமையான மருத்துவப் பிரச்சினையை கொண்டு அழகாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இதே படத்தை ஆமீர்கானை வைத்து இந்தியில் எடுத்தார். அங்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படியாக தமிழை தொடர்ந்து இந்தியிலும் தனது முத்திரையை பதித்தார் முருகதாஸ். நடுவில் தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து 'ஸ்டாலின்' என்ற வெற்றி படத்தை கொடுத்தார்.
இந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து 2011 ஆம் ஆண்டு தமிழில் ‘ஏழாம் அறிவு’ படம் இயக்கினார். இந்த படத்தில் காலம் மறந்த போதி தர்மரை கண்முன் நிறுத்தி அசத்தினார்.
விஜய்யுடன் கைகூடிய கெமிஸ்ட்ரி
அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் கைகோத்தார் முருகதாஸ். தோல்விகளால் துவண்டு கிடந்த விஜய்யின் கேரியரை தூக்கி நிறுத்தினார். இருவரும் இணைந்து வெளியான ’துப்பாக்கி’ படம் விஜய்க்கு முதல் ரூ.100 கோடி வசூலை பெற்ற படமாக மாறியது. இதனையடுத்து மீண்டும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி 2015 ஆம் ஆண்டு கத்தி, 2018 ஆம் ஆண்டு சர்கார் என அடுத்தடுத்து இணைந்தனர்.
அதேசமயம் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் பிரின்ஸ், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பார் என இயக்கிய அனைத்து படங்களுமே முன்னணி நடிகர்களை வைத்து தான். என்னதான் கதை திருட்டு உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கினாலும் தன் மீதான விமர்சனங்களை எண்ணி ஏ.ஆர்.முருகதாஸ் கவலைப்படுவதில்லை. அவர் மீண்டும் விரைந்து கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் முருகதாஸ்..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

