(Source: ECI/ABP News/ABP Majha)
HBD Kannadasan: "கண்ணே கலைமானே" தீர்க்கதரிசியாக மாறி கண்ணதாசன் சொன்ன அந்த வார்த்தை!
தமிழ் சினிமாவில் காலத்தை வென்ற பல காவிய பாடல்களை தந்த மகாகவிஞன் கவியரசு கண்ணதாசனுக்கு இன்று 97வது பிறந்தநாள் ஆகும்.
தமிழ் திரையுலகின் பாடல்கள் காலத்தால் அழியாத காவியமாக இருப்பதற்கு இசை எந்தளவு முக்கியமாக உள்ளதோ, அதே அளவு பாடலாசிரியர்களின் பங்கும் இன்றியமையாதது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் காலத்தை கடந்து நிற்கும் பாடல்களை எழுதியவர்களில் முதன்மையானவராக இருப்பவர் மறைந்த கவிஞர் கவியரசு கண்ணதாசன் ஆவார். நடிகர், கவிஞர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 97வது பிறந்தநாள் ஆகும்.
காலத்தை வென்ற கவிஞன்:
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்கள் பலருக்கும் பாடல்களை எழுதியவர், எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன், சி.ஆர்.சுப்புராமன், பாபநாசம் சிவன், சங்கர் கணேஷ், இளையராஜா என எண்ணற்ற இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு பலரும் பாடல்களை எழுதியிருந்தாலும், சோகம், வேதனையான தருணத்தில் நமக்கு ஆறுதல் சொல்லும் பாடல்களை எழுதிய பெருமை கண்ணதாசனுக்கே உண்டு. அப்பேற்பட்ட புகழ்பெற்ற கண்ணதாசனின் கை வண்ணத்தில் கடைசியான உருவான பாடல் கண்ணே கலைமானே.
இதுதான் கடைசி பாடல்:
பாலுமகேந்திராவின் மாஸ்டர்பீஸாகவும், கமல்ஹாசன் – ஸ்ரீதேவி இருவரின் அபார நடிப்பில் வெளியான திரைப்படம் மூன்றாம் பிறை ஆகும். படத்தின் திரைக்கதைக்கு மேலும் உயிர் கொடுத்தது இளையராஜாவின் இசையும், பாடல்களும் ஆகும். இந்த படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே பாடல்தான் கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல் ஆகும்.
மிகவும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல மருத்துவர்கள் கண்ணதாசனுக்கு பரிந்துரை செய்தனர். மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் அவர் அமெரிக்கா சென்றார். அமெரிக்கா செல்வதற்கு முன்பு அவர் எழுதிய கடைசி பாடல்தான் கண்ணே கலைமானே ஆகும்.
தீர்க்கதரிசியாக மாறிய கண்ணதாசன்:
இந்த பாடலை எழுதியபின்பு அவர் கண்ணதாசன் தன்னுடன் இருந்தவர்களுடன் இதுதான் நான் எழுதும் கடைசி பாடல்னு நினைக்குறேன் அப்படி என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவர் சொன்னது போல, காலத்திற்கும் அழியாத சாகாவரம் பெற்ற பல பாடல்களை எழுதிய கண்ணதாசன் அமெரிக்காவில் இருந்து சடலமாகவே தமிழ் மண்ணுக்கு திரும்பினார்.
ஒரே நேரத்தில் பல மன நிலைக்கு பாட்டு எழுதும் வல்லமை பெற்ற கண்ணதாசன், தான் எழுதும் கடைசி பாடல் இதுதான் என தீர்க்கதரிசி போல சொன்னதும் உண்மையாகியது. அவரது மரணம் தமிழ் திரைப்பட ரசிகர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. 1981ம் ஆண்டு அக்டோபர் 17ம் நாள் தனது 54 வயதிலே அவர் மரணம் அடைந்தார். காலன் அவரை நம்மிடம் இருந்து பறித்து சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் தனது பாடல் வரிகளால் நம்முடன் வாழ்ந்து வருகிறார்.