HBD Anirudh Ravichander: "இசை உலகின் சூப்பர் ஸ்டார்” .. அனிருத் பிறந்தநாள் இன்று.. இணையத்தில் குவியும் வாழ்த்து..!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத் ரவிச்சந்தர் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத் ரவிச்சந்தர் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இசையுலகின் செல்லப்பிள்ளை
அனிருத் பாரம்பரியமான திரையுலக குடும்பத்தைச் சேர்ந்தவர். சொல்லப்போனால் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமண ஆல்பத்தில் இருக்கும் அனிருத்தை பார்த்தால் நம் அனைவருக்கும் சிரிப்பு தான் வரும். குட்டி குழந்தையாக இருக்கும் அவர் அடுத்த 6 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் இசையமைப்பாளராக அறிமுகமாவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
காரணம், அனிருத்தின் கொள்ளு தாத்தா கே.சுப்பிரமணியம் இந்திய சினிமாவின் தொடக்க கால இயக்குநர்களில் மிக முக்கியமானவர். இவரது தந்தை ரவி ராகவேந்தர் தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகராக உள்ளார். சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அனிருத்துக்கு மாமா முறை என்பதால் சிறுவயதில் இருந்தே கலையுலகை சுற்றிதான் அவர் வளர்ந்துள்ளார்.
பள்ளி இசைக்குழுவில் தனது பத்து வயதில் இருந்தே பணியாற்றி வந்த அனிருத், லயோலா கல்லூரியில் டிகிரி முடித்த பிறகு லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் பியானோ இசையிலும், சவுண்ட் இன்ஜினியரிங்கிலும் தேர்ச்சி பெற்ற நிலையில், கர்நாடகா இசையும் முறைப்படி பயின்றார்.
திரையுலகில் அறிமுகம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய குறும்படங்களுக்கு இசையமைத்த அனிருத், 2012 ஆம் ஆண்டு அவர் இயக்கிய 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தார். முதல் படத்தில் சூப்பரான பாடல்களை கொடுத்து ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தார். இதில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறிடி’ உலகளவில் ஹிட் கொடுத்த அனிருத்துக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாக தொடங்கியது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி, யோயோ ஹனிசிங் ஆகிய ராப் பாடகர்களை அறிமுகம் செய்த பெருமையையும் அனியைச் சாரும். அவரின் முதல் பெரிய படமாக 2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான “கத்தி” அமைந்தது. யாரும் எதிர்பாராத வகையில் தீம் மியூசிக் முதல் பின்னணி இசை வரை மிரட்டியிருந்தார். தொடர்ந்து அஜித், சூர்யா, தனுஷ், கமல், ரஜினி என இன்றைக்கு கோலிவுட்டின் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
இசையுலகின் டான்
முன்னணி, இளம் இசையமைப்பாளர்கள் என அனைவரது இசையிலும் பாடல்களை பாட கேட்டாலும் தயங்காமல் பாடிக் கொடுப்பார். அந்த வகையில் காதல் தொடங்கி சோக பாடல்கள் வரை அனிருத் குரலுக்கு என்று ஒரு கூட்டம் உள்ளது. இசை திருட்டு, நடிகைகளுடன் காதல் என ஏகப்பட்ட சர்ச்சைகள் அனிருத்தை சுற்றி இருந்தாலும் அவர் தான் இன்றைக்கு இசையுலகின் டான் ஆக இருந்து வருகிறார். ரஜினி கூட அனிருத் இசை இல்லை என்றால் ஜெயிலர் படம் சுமார் தான் என தெரிவித்திருந்தார். மொக்க படமாக இருந்தாலும் அனிருத் இசை அதை வேறு தளத்திற்கு கொண்டு சேர்த்து விடும்.
நடப்பாண்டு அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்த ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் எண்ட்ரீ கொடுத்து விட்டார். தொடர்ந்து விடா முயற்சி, இந்தியன் 2, தலைவர் 170,171 என வரிசையாக படங்கள் நிற்கின்றது. 33 வயதிலேயே அனிருத்துக்கு இத்தகைய உயரம் கிடைத்தது உண்மையில் அவரது முயற்சிக்கான பரிசு தான். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அனிருத்..!