Actors Comeback: ஷாருக்கான் முதல் ரன்பீர் வரை.. 2023 ஆம் ஆண்டு மிரட்டல் கம்பேக் கொடுத்த பாலிவுட் பிரபலங்கள்!
2023 ஆம் ஆண்டு மீண்டும் திரையுலகில் கம்பேக் கொடுத்துள்ள பாலிவுட் பிரபலங்களைப் பார்க்கலாம்
2023 ஆம் ஆண்டு பல பாலிவுட் நடிகர்கள் கம்பேக் கொடுத்துள்ளார்கள். நடிகர் , இயக்குநர், வில்லன் என மீண்டும் பாலிவுட் சினிமாவிற்குள் நுழைந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள பாலிவுட் நடிகர்களைப் பார்க்கலாம்.
ஷாருக் கான்
ஷாருக் கான் ரசிகர்களின் மனதில் எப்போது இருக்கும் ஒரு பிரபலம். ஆனால் ஷாருக் கான் நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தன. ஜப் ஹாரி மெட் சாலி , ஜீரோ உள்ளிட்டப் படங்களின் தோல்வியைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்தப் படத்திற்கு 4 ஆண்டுகால இடைவேளை எடுத்துக் கொண்டார் ஷாருக் கான். இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பதான் திரைப்படம் மீண்டும் ஷாருக் கானை பாலிவுட் பாட்ஷா என்கிற பட்டத்திற்கு சொந்தமாக்கியது. தொடர்ந்து ஜவான் , டங்கி என அடுத்தடுத்தப் படங்களின் மூலம் இந்த ஆண்டை தனக்கு சொந்தமானதாக மாற்றியுள்ளார் ஷாருக் கான்.
அனிமல்
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்து இந்த ஆண்டு வெளியான ‘து ஜூட்டி மே மக்கர்’ திரைப்படம் வசூல் ரீதியாக பெரிதாக சோபிக்கவில்லை இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் வெளியான அனிமல் திரைப்படம் கடும் விமர்சனங்களைத் தாண்டி இண்ட்ஸ்ட்ரி ஹிட் அடித்து ரன்பீர் கபூரின் மார்கெட்டை பாலிவுட் சினிமாவில் மீண்டும் உயர்த்தியுள்ளது.
சன்னி தியோல் , பாபி தியோல் , தர்மேந்திரா
பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா பல வருடங்களுக்குப் பிறகு திரைக்கு திரும்பியுள்ளார். கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி படத்தில் தர்மேந்திரா நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல வருடங்களாக திரைப்படங்களில் காணாமல் போன சன்னி தியோல் கதர் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்தப் படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பாபி தியோல் சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அனிமல் படத்தில் பாபி தியோலின் கதாபாத்திரம் இணையதளத்தில் படுவைரலானது. இந்நிலையில் குடும்பமான இந்த அப்பா - மகன்கள் காம்போ கம்பேக் தந்துள்ளது.
கஜோல்
சுபர்ன் வர்மா இயக்கத்தில் வெளியான வெப் சீரிஸ் தி ட்ரையல். இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் கஜோல் நடித்திருந்தார். வழக்கறிஞராக அவரது கதாபாத்திரம் பல வருடங்கள் கழித்து ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது.
கரீனா கபூர்
கபி குஷி கபி கம் படத்தில் ’பூ’ மற்றும் ஜப் வி மெட் படத்தில் ’கீத்’ போன்ற கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் கரீனா கபூர். தான் முன்பு நடித்த கதாபாத்திரங்களுக்கு மேலாக ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார் அவர். இதனைத் தொடர்ந்து சுஜய் கோஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜானே ஜான் படம் அவருக்கு புதிய ஒரு பரிணாமத்தைக் கொடுத்துள்ளது.
கரண் ஜோகர்
7 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கி பாலிவுட்டில் ஹிட் கொடுத்துள்ளார் கரண் ஜோகர். ரன்வீர் சிங் , அலியா பட் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.