இளையராஜா இசையில் முதல் சினிமா பாடல்.. `மாமனிதன்’ படம் மூலம் சினிமாவில் கால்பதிக்கும் முத்து சிற்பி!
`சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகர் முத்து சிற்பி தற்போது இளையராஜாவின் இசையில் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகும் `மாமனிதன்’ படத்தில் பாடல் பாடியுள்ளார்.
`சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பங்குபெற்று புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகர் முத்து சிற்பி தற்போது இசைஞானி இளையராஜாவின் இசையில் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகும் `மாமனிதன்’ படத்தில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
வழக்கமாக, விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இருவரும் இணைந்த `தென்மேற்குப் பருவக்காற்று’ திரைப்படம் விஜய் சேதுபதியின் சினிமா பயணத்தில் முக்கியமான திரைப்படமாக இருக்கிறது. இருவரும் இணைந்து பணியாற்றிய `தர்மதுரை’ திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற வெற்றித் திரைப்படம். இந்நிலையில் இருவரும் இணைந்து சமீபத்தில் பணியாற்றிய `மாமனிதன்’ திரைப்படம் பல நாள்களாக வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, தடைப்பட்டு நின்றது. தற்போது இந்தச் சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, எந்தப் பிரச்னையும் இன்றி வெளியாவதாக உள்ளது. படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதோடு, படத்தின் ட்ரைலர் யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் இசையமைப்பாளர்களாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளனர்.
இந்நிலையில் `மாமனிதன்’ படத்தில் திரைப்படத்தில் பாடகராக அறிமுகமாகிறார் `சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பங்கேற்று, புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகர் முத்து சிற்பி. `சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் அறிமுகமான போதே, `கர்ணன்’ படத்தின் பாடலைப் பாடியவர் முத்து சிற்பி. மேலும் தொடர்ந்து, அவரின் பாடல்களால் மக்கள் பலரும் முத்து சிற்பியை ரசிக்கத் தொடங்கினர். தற்போது முத்து சிற்பிக்குப் பெரிய திரையில், இசையமைப்பாளர்கள் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் இசையில் பாடி அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இசைஞானி @ilaiyaraaja@thisisysr இசையில் உருவான#மாமனிதன் திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமாகும் உள்ளம் கவர்ந்த பாடகர் நாடக நடிகர் தம்பி முத்துசிற்பி நாரதருக்கு @Muthusirpi1 என் நெஞ்சார்ந்த
— R.Seenu Ramasamy (@seenuramasamy) December 5, 2021
வாழ்த்துகள்.@lyricistkaruna @VijaySethuOffl @YSRfilms pic.twitter.com/mDi8TS369U
நாட்டுப்புறப் பாடகர் முத்து சிற்பி `மாமனிதன்’ படத்தில் பாடல் ஒன்றைப் பாடியிருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான #மாமனிதன் திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமாகும் உள்ளம் கவர்ந்த பாடகர் நாடக நடிகர் தம்பி முத்து சிற்பி நாரதருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.’ என்று பதிவிட்டுள்ளார். பாடகர் முத்து சிற்பி பாடவுள்ள பாடலை பாடலாசிரியர் கருணாகரன் எழுதியுள்ளார் எனக் கூறப்படுகிறது.