நாட்டார் தெய்வத்தை கேலி செய்ததற்காக மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்
காந்தாரா படத்தின் காட்சிகளை பொது மேடையில் நடித்து காட்டியதற்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்

பாலிவுட் நடிகர் சன்வீர் சிங் காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டியைப் போல் நடித்து காட்டியதற்காக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். தனது செயலுக்காக ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
ரன்வீர் சிங் செயலால் சர்ச்சை
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த சில மாதங்கள் முன்பு காந்தாரா இரண்டாம் பாகம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்றது. பழங்குடி மக்களின் நாட்டார் தெய்வத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது. ரிஷப் ஷெட்டி நாட்டார் தெயவமான சாமுண்டி தெய்வமாக நடித்திருந்த விதம் பெரியளவில் பாராட்டப்பட்டது. அதே நேரத்தில் பலர் அவரைப் போல் நடித்து சமூக வலைதளத்தில் வீடியோக்கள் வெளியிட்டனர். இதனை படக்குழு முன்பே எச்சரித்திருந்தது. அப்படி செய்வது நாட்டார் தெய்வத்தை அவமானப்படுத்துவதாகும் என்பதால் இந்த மாதிரியான செயல்களை தவிர்க்கும்படி ரிஷப் ஷெட்டி அறிவுறுத்தி இருந்தார்.
அண்மையில் கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரிஷப் ஷெட்டி மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது ரிஷப் ஷெட்டியிடம் காந்தாரா படத்தை ரன்வீர் சிங் சிலாகி பேசினார். காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி நடித்தது போல் ரன்வீர் சிங் நடித்து காட்டினார். அப்படி செய்ய வேண்டாமென ரிஷப் ஷெட்டி உடனே ரன்வீர் சிங்கை எச்சரித்தார் . ஆனால் அதை சுத்தமாக பொருட்படுத்தாமல் மேடையில் ரன்வீர் சிங் மீண்டும் அதே போல் நடித்து காட்டினார். இது தற்போது ரன்வீர் சிங் எதிராக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்கின் செயல்பாட்டால் சாமுண்டி தெய்வத்தை வழிபடும் கர்நாடகாவில் துளு மொழி பேசும் மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்கள். ரன்வீர் சிங்கில் செயல்பாட்டால் தங்களது உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும்த் தங்களது தெயவம் அவமதிக்கப்பட்டுள்ளதாக துளு நாடு மக்கள் சமுதாய தலைவர் பத்திரிகை சந்திப்பில் கூறியுள்ளார். மேலும் ரன்வீர் சிங் தனது செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கன்னட மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
தற்போது ரன்வீர் சிங் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். " காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை பாராட்டுவதற்காகவே அப்படி செய்தேன். ஒரு நடிகனாக அந்த மாதிரியான ஒரு காட்சியில் நடிப்பது எவ்வளவு சவாலானது என்பது எனக்கு தெரியும். நான் எப்போதும் எல்லா கலாச்சாரங்களையும் நம்பிக்கைகள் மீதும் பெரும் மரியாதை வைத்திருக்கிறேன். என்னுடைய செயலால் நான் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். " என அவர் கூறியுள்ளார்





















