Santhosh Narayanan: ஏ.ஆர்.ரஹ்மானும் ஏமாந்துள்ளார்: என்ஜாய் எஞ்சாமி பாடல் விவகாரத்தில் சந்தோஷ் நாராயணன் விளக்கம்
Santhosh Narayanan - A R Rahman: ரசிகர்கள், சந்தோஷ் நாராயணன் ஏ.ஆர்.ரஹ்மானின் மாஜா தளத்தினைத் தான் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் என நேற்று இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.
என்ஜாய் எஞ்சாமி ஆல்பம் பாடல் வெளியாகி 3 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு நேற்று பேசிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan), இப்பாடல் மூலம் தனக்கு ஒரு பைசா கூட வருமானம் கிடைக்கவில்லை என அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்திருந்தார்.
487 மில்லியன் பார்வையாளர்கள்
ஏ.ஆர்.ரஹ்மானின் மாஜா எனும் யூடியூப் சேனலின் மூலம் இப்பாடல் வெளியிடப்பட்ட நிலையில், தீ - தெருக்குரல் அறிவு, ராப் பாடகர் ஷான் வின்செண்ட் டி ஆகியோர் இணைந்து இந்தப் பாடலைப் பாடி இருந்தனர். சர்வதேச அளவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் புகழ்பெற்ற இப்பாடல், இதுவரை 487 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் பெற்றுள்ளது.
ஒருபுறம் சர்வதேச தளத்தில் இப்பாடல் பிரபலமடைய, மற்றொருபுறம் இப்பாடல் குறித்த சர்ச்சைகளும் வெளியானது முதலே எழுந்து வருகின்றன. அமெரிக்க மாத இதழான ரோலிங் ஸ்டோனில் தெருக்குரல் அறிவின் புகைப்படம் தவிர்க்கப்பட்டு, தீ மற்றும் ஷான் ஆகியோரின் புகைப்படங்கள் மட்டும் இடம்பெற்றது கடும் கண்டனங்களைப் பெற்ற நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து மோதல் வெடித்தது. தொடர்ந்து இணையத்தில் கண்டனங்கள் வலுக்க, ரோலிங் ஸ்டோன் இதழில் டிஜிட்டல் பதிப்பில் தெருக்குரல் அறிவின் புகைப்படம் இடம்பெற்றது.
தொடரும் சர்ச்சைகள்
எனினும் இந்தப் பிரச்னை ஓயாமல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், பாடகர் தெருக்குரல் அறிவு , சந்தோஷ் நாராயணன், பா.ரஞ்சித் என கருத்து வேறுபாடு தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், எஞ்சாயி எஞ்சாமி பாடல் குறித்த புதியதொரு சர்ச்சை தொடங்கியுள்ளது. அதன்படி நேற்று தன் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்த சந்தோஷ் நாராயணன், இந்தப் பாடல் மூலம் எங்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். இதில் என் யூட்யூப் வருமானமும் அந்த லேபிளுக்கே செல்கிறது. இந்த மோசமான அனுபவத்தால் நான் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்க போகிறேன். தனி இசைக் கலைஞர்களுக்கென வெளிப்படைத் தன்மையுடன் கூடிய தளங்கள் தேவை” எனப் பேசி இருந்தார்.
‘ஏ.ஆர்.ரஹ்மானும் ஏமாந்துள்ளார்'
இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் சந்தோஷ் நாராயணன் ஏ.ஆர்.ரஹ்மானின் மாஜா தளத்தினைத் தான் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளார் எனக் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் சந்தோஷ் நாராயணன் மற்றுமொரு பதிவினைப் பகிர்ந்துள்ளார்.
”என் அன்புக்குரிய ஏ.ஆர்.ரஹ்மானும் இந்த விஷயத்தில் மாஜா நிறுவனத்தின் படுதோல்வி தாண்டி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தூணாக ஆதரவு தந்தார். ஏ.ஆர்.ரஹ்மானும் பல பொய்யான வாக்குறுதிகளுக்கு பலியானார். நன்றி சார். அறிவு, ஷான், தீ உட்பட பல இந்தியக் கலைஞர்கள் மற்றும் நான் உட்பட பலர் எங்கள் வருவாயை எந்த வடிவத்திலும் பெறவில்லை. மாறாக மின்னஞ்சல்களால் சீண்டப்பட்டோம். இந்தத் தருணத்தில் இந்தியக் கலைஞர்களை ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
My dearest @arrahman sir has always been a pillar of support without any expectations through the entire Maajja fiasco and he is also a victim of many false promises and malice. Thank you sir 🤗🤗. Many indie artists including Arivu, Svdp, Dhee and many others including myself…
— Santhosh Narayanan (@Music_Santhosh) March 5, 2024
என் வழிகாட்டி பா.ரஞ்சித் மற்றும் பாடகர் அறிவுடன் நடந்தவற்றை சரிசெய்வேன். நான் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அனைத்து இந்தியக் கலைஞர்களுக்கும் அவர்களின் கட்டண நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.